பண்டிகை சீசனுக்கு குவியும் தரமற்ற சீன பொம்மை இறக்குமதியை தடுக்க விதிகளை கடுமையாக்கியது அரசு

புதுடெல்லி: பண்டிகை சீசனுக்கு சீன பொம்மை இறக்குமதியை தடுக்க, தர ஆய்வு விதிகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் மலிவு விலையில் தரமற்ற பொருட்களை இந்தியாவுக்கு சீனா ஏற்றுமதி செய்து வருகிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் சாதாரண பிளாஸ்டிக் பொருட்கள் வரை இந்திய சந்தையில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பண்டிகை சீசன் நெருங்கி வருகிறது. நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என இந்த ஆண்டு இறுதி வரை இனி பண்டிகை சீசன் விற்பனை களைகட்டும். இதில் பரிசு பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும். குறிப்பாக, விதவிதமான பொம்மைகளுக்கு கிராக்கி அதிகம் ஏற்படும். இதற்காக, உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி சீனாவில் இருந்தும் பொம்மைகள், பரிசு கொடுப்பதற்கான கலை நயம் மிக்க பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், சீன பொம்மைகள் தரம் குறைந்தவை. இவற்றை பயன்படுத்தும் குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட் ட உண்மை. ஆனால், மலிவு விலை என்பதாலும், அதிக லாபம் கிடைப்பதாலும் சில வியாபாரிகள் சீன பொம்மை, பரிசு பொருட்களை வாங்கி விற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  எதிர்வரும் பண்டிகை சீசனுக்கு இத்தகைய மலிவான சீன தயாரிப்புகள் இறக்குமதியை தடுக்க தர விதிகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், ரசாயன கலப்பு, தீப்பிடிக்கும் தன்மை உட்பட உள் மற்றும் வெளி சோதனைகளில் சீன பொம்மை உள்ளிட்ட பொருட்கள் உட்படுத்தப்பட வேண்டும். மின்னணு மற்றும் மெக்கானிக் இயக்கத்துடன் கூடிய பொம்மைகளும் இதில் அடங்கும். ஏற்கெனவே உள்ள விதிகளோடு புதிய தர விதிகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் மூலம் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், இந்திய தரவிதிகளுக்கு பொருந்தியிருந்தால் மட்டுமே இறக்குமதி அனுமதி தர வேண்டும் எனவும், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்பவர் இந்திய ஆய்வக சோதனை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் கண்காணிக்கப்பட இருக்கின்றன என மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. இதன்படி, எலக்ட்ரானிக் பொம்மைகள் மட்டுமின்றி ஊஞ்சல் போன்ற மலிவான சீன தயாரிப்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கின்றன.முன்கூட்டியே ஆர்டர் உற்பத்தியாளர்கள் கவலைஇந்திய பொம்மை சந்தையில் 70 சதவீதத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கை சீன இறக்குமதியை மட்டுமின்றி, குழந்தைகளின் உடல் நலனை பாதுகாக்கும் செயலாகவும் அமைந்துள்ளது. இருப்பினும் இறக்குமதியாளர்கள் பலர் பண்டிகை சீசனுக்கு முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளனர். புதிய விதி அமல்படுத்தியதற்கு முன்பே இறக்குமதி அனுமதி பெற்று விட்டனர். இதையும் அரசு கருத்தில் கொண்டு கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துளளனர்.2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடல்இந்தியாவில் பொம்மை உற்பத்தி தொழில் மூலம் 25 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். சீன பொம்மை இறக்குமதியால் கடந்த 5 ஆண்டில் சுமார் 2,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. 40 சதவீத விற்பனையாளர்கள் கடையை மூடிவிட்டனர் என இந்திய பொம்மை உற்பத்தி துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.