போலீசை வைத்து எங்கள் எம்எல்ஏக்களை மிரட்டுகிறார்: எடப்பாடி மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுப்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். இதுகுறித்து டி.டி.வி.தினகரன் நேற்று சென்னை, பெசன்ட்நகர் இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடக மாநிலம் மைசூரில் தங்கி இருக்கும் எங்களது ஆதரவு எம்எல்ஏக்களை தமிழக காவல் துறையினரை அனுப்பி மிரட்டுகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உங்களுக்கு 15 முதல் 20 கோடி ரூபாய் தருகிறோம். இல்லையென்றால் உங்கள் மீது வழக்குகள் போடுவோம் என்று மிரட்டப்படுவதாக எம்எல்ஏக்கள் என்னிடம் கூறினார்கள். தமிழகத்தில் ஆட்சி செய்யும் துரோக ஆட்சி, எனது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது வழக்கு போடுவேன், கைது செய்வேன் என்று போலீசார் மூலம் மிரட்டுகிறார்கள். இதுபற்றி எங்கள் எம்எல்ஏக்கள் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பார்கள். நாங்கள் நீதிமன்றத்தை நாடி, தமிழக காவல் துறை மீதும், முதல்வர் எடப்பாடி மீதும் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். காவல்துறை பொறுப்பை முதல்வர் தான் வைத்துள்ளார். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.என் மீதும், நடிகர் செந்தில் மீதும் திருச்சி போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். செந்தில், எனது தூண்டுதலின் பேரில் பேட்டி கொடுத்தார் என்று வழக்கு போடப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு போலீசார் தரம் தாழ்ந்து செயல்படுகிறார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது. இன்றைக்கு பழனியப்பன் எம்எல்ஏ கைது செய்யப்பட்டதாக செய்தி வருகிறது. உண்மை அது அல்ல. அரசாங்கத்தின் அத்துமீறல்களை கடந்த 30 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். இதுபோன்று அதிகாரத்தில் ஆடியவர்கள் எல்லாம் காணாமல் போயிருக்கிறார்கள். 21 எம்எல்ஏக்கள் எங்களுக்கு தற்போது ஆதரவாக உள்ளனர். எடப்பாடி அணியில் பலர் எங்களது ஸ்லிப்பர் செல்ஸ் எம்எல்ஏக்களாக உள்ளனர். ஏற்கனவே கூறியபடி, இரண்டு நாள் காத்திருப்போம். எடப்பாடி கூட்டிய பொதுக்குழுவுக்கு அதிமுக (அம்மா) அணியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் செல்லவில்லை. அது ஒரு பொதுக்கூட்டம். எடப்பாடி ஆட்சியில் இருப்பவர்கள், எங்களால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்தான் பொதுக்குழுவில் கலந்து கொண்டனர். அங்கு சென்றவர்கள் எடப்பாடி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள்தான். ஜெயலலிதா இருந்த இடத்தில் யாரையும் வைத்து பார்க்க முடியாது என்று கூறுபவர்கள், ஏன் கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி பொதுச்செயலாளராக சசிகலாவை  தேர்ந்தெடுத்தார்கள்? ஜெயலலிதா இருந்த முதல்வர் சீட்டில் எடப்பாடி பழனிச்சாமி உட்கார அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும், தமிழக மக்களும் விரும்பவில்லை.பொதுக்குழு விஷயத்தில் கோர்ட் உத்தரவு தெளிவாக உள்ளது. எடப்பாடி, ஓபிஎஸ் நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எந்த உயிரும் இல்லை. கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் என்றுதான் எடப்பாடி தேர்தல் ஆணையத்திடம் அபிடவிட் கொடுத்துள்ளார். இப்போது அவரே சசிகலா, தினகரன் பதவி செல்லாது என்கிறார். இதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்.இதுகுறித்து நாங்கள் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து நிதானமாக முடிவு எடுப்போம். கட்சியை காப்பாற்ற எந்த ஒரு முடிவையும் நாங்கள் எடுப்போம். எங்கள் எம்எல்ஏக்களும், சசிகலா மற்றும் நான் சொல்லும் எந்த ஒரு முடிவையும் ஏற்று செயல்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார். செந்தில், எனது தூண்டுதலின் பேரில் பேட்டி கொடுத்தார் என்று வழக்கு போடப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு போலீசார் தரம் தாழ்ந்து செயல்படுகிறார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது.உணர்ச்சிவசப்பட்ட டி.டி.வி.தினகரன்:வழக்கமாக டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, சிரித்தபடி எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிப்பார். ஆனால், நேற்று சென்னை பெசன்ட்நகர் இல்லத்தில் டி.டி.வி.தினகரன் பேட்டி அளிக்கும்போது, நிருபர்களிடம் உணர்ச்சிவசப்பட்டு, கோபமாக பதில் அளித்தார். ஆனாலும், நிருபர்கள் விடாமல் கேள்வி கேட்டனர். இதுபற்றி அவரது ஆதரவாளர்கள் கூறும்போது, “அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் கட்சியில் தினகரன் செல்வாக்கு குறைய தொடங்கியுள்ளது. அதனால் தான் பத்திரிகையாளர்களிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசி இருக்கலாம்” என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.