நவோதயா பள்ளிகளை திறக்க அரசு அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன் அறிக்கை

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு எட்டு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை தமிழக அரசு ஏற்கக் கூடாது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற திட்டம் 1986ல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது கொண்டுவரப்பட்டது. அந்த பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்பதால் எம்ஜிஆர் தலைமையிலான அன்றைய தமிழக அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது.எம்ஜிஆர் ஆட்சிக்காலத்திலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பதில்லை என்று உறுதியாக இருந்தனர். அவர்கள் வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்ளும் இன்றைய அதிமுக அரசும் அதில் உறுதியாக இருந்து உயர் நீதிமன்ற ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்.நவோதயா பள்ளிகளால் ஒரு மாநிலத்தின் கல்வித் தரம் உயர்ந்துவிடாது என்பதற்கு அப்பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ள பீகாரும் உத்திரபிரதேசமுமே சாட்சி. நவோதயா பள்ளிகளை நீதிமன்றத்தின் மூலம் தமிழ்நாட்டின் மீது திணிப்பதற்கு பாஜக செய்து வரும் முயற்சியை முறியடித்து, தமிழ்நாட்டின் கல்வி காவிமயமாகாமல் தடுப்பதற்குத் தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் முன் வர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.