திருவாரூர் ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் பேச்சு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றுசேர வேண்டும்

திருவாரூர்: கோமா நிலையில் உள்ள ஆட்சியை அகற்ற, தமிழகத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஆர்.முத்தரசன் பேசினார்.   நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று திமுக சார்பில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில ெசயலாளர் முத்தரசன் பேசியதாவது: பிரிட்டீஸ் காலத்தில் இருந்து பெரியார் போராடி பெற்ற இட  ஒதுக்கீட்டுக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களையும் நம்பியதால் மாணவி அனிதா மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நாடு, மக்களைப்பற்றி கவலைப்படாமல், அடித்த கொள்ளையை காப்பாற்றவும், மேலும் கொள்ளை அடிக்கவும் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆகி உள்ளார். இதுபோல் அரசின் அனைத்து துறைகளிலும் கடைசி நேர வசூல் நடந்து வருகிறது.  மோடி தயவில் நடந்து வரும் இந்த ஆட்சி, இப்போது கோமா நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் முடிந்து போகலாம். எனவே தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமும், தேவையும் ஏற்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.