ஐ.நா தடைக்கு பதிலடி ஆயுத தயாரிப்பை உயர்த்த வடகொரியா முடிவு

யாங்யாங்: ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு பிறகு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடைகள் விதித்ததால், ஆத்திரம் அடைந்த வடகொரியா ஆயுத தயாரிப்பை அதிகரிப்போம் என கூறியுள்ளது. அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து வந்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை செய்ததால், நிலக்கரி, காரியம் மற்று கடல் உணவு ஆகியவற்றை வடகொரியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. அது ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி மீண்டும் ஹைட்ரஜன் குண்டு சோதனையை வடகொரியா நடத்தியது. இது வடகொரியாவின் 6வது அணு ஆயுத சோதனை. இதற்காக வடகொரியா மீது கடுமையான தடைகள் விதிக்க வேண்டும் என அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தின.  இதையடுத்து வடகொரியாவின் ஜவுளி ஏற்றுமதிக்கு தடை விதித்தும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய தடை வடகொரியாவை மேலும் ஆத்திரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘அமெரிக்கா கொண்டு வந்த மற்றொரு சட்டவிரோத மற்றும் தீய தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ளது. இது சரியான நடவடிக்கையா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வடகொரியா தனது இறையாண்மையை பாதுகாக்கவும், தனது பலத்தை அதிகரிக்கவும் இரட்டிப்பு முயற்சி மேற்கொள்ளும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிரோசிமா குண்டை விட 16 மடங்கு பெரியதுவடகொரியா கடந்த 3ம் தேதி ஹைட்ரஜன் குண்டு சோதனை செய்தபோது, ரிக்டர் அளவில் 6.3 புள்ளிகள் நில அதிர்வை ஏற்படுத்தியதாக அமெரிக்க புவியியல் மையம் கூறியுள்ளது. இதனால் 250 கிலோ டன் அணு குண்டு சோதனை செய்யப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது. ஜப்பானின் ஹிரோசிமா நகரில், அமெரிக்கா கடந்த 1945ம் ஆண்டில் வீசிய அணு குண்டின் அளவு 15 கிலோ டன். தற்போது வடகொரியா சோதனை செய்த அணுகுண்டு 16 மடங்கு பெரியது என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.