புக்கர் பரிசு தேர்வு பட்டியல் அருந்ததி ராய் பெயர் இல்லை

லண்டன்: இந்தாண்டுக்கான புக்கர் பரிசு தேர்வு பட்டியலில், இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் பெயர் இடம் பெறவில்லை.  ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இங்கிலாந்தில் வெளியிடப்படும் சிறந்த நாவல்களுக்கு ‘மேன் புக்கர்’’ என்ற இலக்கிய பரிசு வழங்கப்படுகிறது. இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் கடந்த 1997ம் ஆண்டு எழுதிய ‘தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ என்ற நாவலுக்கு புக்கர் பரிசு கிடைத்தது. அத்துடன் 50 ஆயிரம் பவுண்ட் பரிசுத் தொகையையும் வென்றார். சமீபத்தில் அவர் ‘தி மினிஸ்ட்ரி ஆப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’ என்ற நாவலை எழுதினார். இது இந்தாண்டுக்கான புக்கர் பரிசு தேர்வுக்கு அனுப்பப்பட்டது. இதை படித்த நடுவர்கள், இந்த நாவல், ‘இந்தியாவின் வயிற்றில் இருந்து வெளிவந்துள்ள மிகச் சிறப்பான புத்தகம்’ என கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், நேற்று வெளியிடப்பட்ட புக்கர் பரிசுக்கான தேர்வு பட்டியலில் அருந்ததி ராய் பெயர் இடம் பெறவில்லை. இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா எழுத்தாளர்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அமெரிக்க எழுத்தாளர்கள் பால் ஆஸ்டர் எழுதிய ‘4321’, எமிலி பிரிட்லண்ட் எழுதிய ‘ஹிஸ்ட்ரி ஆப் உல்ப்ஸ்’, ஜார்ஜ் சாண்டர்ஸ் எழுதிய ‘லின்கன் இன் த பர்டோ’, இங்கிலாந்து எழுத்தாளர்கள் பியோனோ மோஸ்லே எழுதிய எல்மட், அலி ஸ்மித் எழுதிய ‘ஆட்டம்’, ஆகியவை உட்பட பல எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.   இதிலிருந்து இறுதியாக 6 நாவல்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் 17ம் தேதி புக்கர் பரிசு அறிவிக்கப்படும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.