ஒகேனக்கல்லில் 13வது நாளாக பரிசல் இயக்க தடை மேட்டூர் அணை நீர்மட்டம் 77 அடியாக உயர்வு

மேட்டூர்:  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.33 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் முதல் காவிரி மகா புஷ்கர திருவிழாவுக்காக, 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் தாக்கம் குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 16,441 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10,165 கனஅடியாக சரிந்துள்ளது. அணையின்நீர்மட்டம் 77.33 அடியாகவும், நீர் இருப்பு 39.34 டிஎம்சியாகவும் உள்ளது. காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் 144 ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகா புஷ்கர திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. ஒகேனக்கல் தொடங்கி, பூம்புகார் வரையிலுமாக மொத்தம் 14 இடங்களில், வரும் 24ம்தேதி வரை இவ்விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவிற்காக நேற்று இரவு 9 மணி முதல் மேட்டூர் அணையின் நீர்திறப்பு 700 கனஅடியில் இருந்து, 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், 13வது நாளாக நேற்றும் பரிசல் இயக்க தடை நீடித்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.