சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹலிமா யாக்கோப் போட்டியின்றி தேர்வு

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக அந்நாட்டை சேர்ந்த ஹலிமா யாக்கோப் தேர்ந்தெடுக்கப்பட்டுளார். சிங்கப்பூரின் அரசியல் சட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின்படி நாட்டின் அதிபர் தேர்தலானது ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட ஒரு பாரம்பரிய இனக்குழுவினருக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்படி இம்முறை மலாய் இனத்தவருக்கு அதிபர் பதவி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, ஹலிமா யாக்கோப், தொழிலதிபர்கள் மொஹம்மத் சாலே மரிக்கன் மற்றும் பாரீத் கான் ஆகிய மூவரும் இம்முறை களத்தில் இருந்தனர். இவர்கள் மூவரில் ஹலிமாவினைத் தவிர மற்ற இருவரும் அதிபர் பதவிக்கான குறைந்தபட்ச தகுதிகளை கொண்டிருக்காத காரணத்தால் ஹலிமா போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார். ஹலிமா யாக்கோப் 1954ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய தந்தைக்கும், மலேசியப் பெண்ணுக்கும் பிறந்தவர். தன்னுடைய அரசியல் பயணத்தினை, சிங்கப்பூரின் பிரபலமான மக்கள் செயல்பாட்டு கட்சியுடன் துவக்கினார். 2011ல் அந்நாட்டின் அமைச்சரவையில் இணைந்தவர், 2013ம் ஆண்டு நாடாளுமன்ற சபாநாயகரானார். நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக விதிமுறைகளின்படி கடந்த மாதம் தன்னுடைய சபாநாயகர் பதவி மற்றும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். இவரது பதவியேற்பு விழாவானது நாளை காலை அதிபர் மாளிகை மற்றும் அலுவலகம் அமைந்துள்ள இஸ்தானாவில் நடைபெறுமென்று, பிரதமர் லீ சீன் ஹுங் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.