சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் போல் செயல்படுவது ஏன்? : நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகள்

மதுரை: சுங்கச்சாவடிகளில் ஒரே பாதையில் ஒரே நேரத்தில் 6 வாகனங்களுக்கு மேல் நின்றால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் அனுப்ப வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறதா என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சுங்கக் கட்டணம் வசூலித்து விட்டு மணல் லாரிகளை சாலையின் ஓரத்தில் நிறுத்த அனுமதித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதாக கூறி மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் சுங்கச்சாவடிகளில் அவசர மருத்துவ வசதி மற்றும் மீட்பு வாகனங்கள் உள்ளனவா, கழிப்பறைகள் உண்டா என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். சாதாரண நாட்களில் ஒரே வரிசையில் ஒரே நேரத்தில் 6 வாகனங்களுக்கு மேல் காத்திருந்தால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்கள் அனுப்ப வேண்டும் என்ற சுங்கச்சாவடி கட்டண வசூல் விதிகள் பின்பற்றப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தேசிய நெடுஞ்சாலைத்துறை பொதுமேலாளர் வாகனங்களில் வருவோர் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை தருவதால் அவர்களுக்கு சில்லரை தருவதற்கு தான் தாமதமாவதாக தெரிவித்தார். இதனால் தான் நீதிமன்றம் கூறும் அந்த ஷரத்து சுங்கச்சாவடி விதிகளில் இருந்தாலும் அதை பின்பற்றவில்லை என்றும் தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் 23 சுங்கச்சாவடிகளில் மின்னணு கட்டண வசூல் முறை பின்பற்றப்படுவதாகவும் விரைவில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் மின்னணு முறை அமல்படுத்தப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறை ஆணைய பொதுமேலாளர் கூறினார். இதையடுத்து பொதுநல மனு குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொதுமேலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுவாக சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் இடங்களில் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் தான் அதிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். சுங்கச்சவாடிகள் தவறு இழைக்கும் போது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பி நீதிபதிகள், கேரளாவில் சுங்கச்சாவடிகளில் தவறு நடப்பதாக தெரிந்தால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூட்டிக்காட்டினர். இதையடுத்து தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.