தென்காசி அருகே ஸ்டூடியோ அதிபர் வீட்டில் கொள்ளை

தென்காசி: தென்காசி அருகே மேலகரம், ஸ்டேட் பாங்க் காலனி 1வது விரிவாக்கம் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் தென்காசி, மேலமாசி வீதியில் ஸ்டூடியோ வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் பெரிய ஹாலில் மணிகண்டன், அவரது மனைவி, குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். மணிகண்டனின் பெற்றோர் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் சுவர் ஏறிக் குதித்து வீட்டின் வாசலுக்கு வந்த மர்ம நபர் கிரில் கேட் கதவின் சாவி ஒரு ஆணியில் மாட்டியிருப்பதை கவனித்தார். அதை தான் வைத்திருந்த கம்பால் எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தார்.வீட்டில் கொடியில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகண்டனின் சட்டையில் இருந்த ரூ.300, பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.4 ஆயிரம் மற்றும் பீரோவிலிருந்த ரூ.20 ஆயிரத்தையும் திருடிக் கொண்டு மணிகண்டனின் பெற்றோர் இருந்த அறைக்குள் புகுந்தார். சத்தம் கேட்டு மணிகண்டனின் தந்தை விழிக்கவே, டீ ஷர்ட் அணிந்திருந்த ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவர் தனது மகன் தான் என்று நினைத்த தந்தை,  மணி என்று அழைக்கவே மர்ம நபர் வீட்டைத் திறந்து கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே அத்துமீறி புகுந்து பணம் திருடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.