தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்: பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு

சென்னை: அதிமுகவின் சாதாரண அடிமட்ட தொண்டர்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பணியாற்றுகிற வாய்ப்பு வழங்கியவர் ஜெயலலிதா என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் காப்பாற்றுகின்ற பெரும் பொறுப்பை தொண்டர்களாகிய நம்மிடம் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். எனக்கு பின்னாலும், அதிமுக 100 ஆண்டுகளுக்கு மேலும் இருக்கும் என்று ஜெயலலிதா சொன்னார். நம் மீது உள்ள ஒற்றுமையின் நம்பிக்கையில்தான் அவர் சொன்னார். அன்று சட்டமன்றத்திலே ஒரு பெண் சிங்கம் போல கர்ஜித்தது, வெறும் முழக்கமல்ல, தமிழக மக்களுக்கு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி. அந்த வாக்குறுதியை நாம் காப்பாற்ற வேண்டும்.நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும், செயலும் ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்க வேண்டும். சாதாரண அடிமட்ட தொண்டர்களுக்கும், கட்சியிலும், ஆட்சியிலும், மக்கள் பணியாற்றுகின்ற மாபெரும் பொறுப்புகள் வழங்கி, மகிழ்ந்தவர் ஜெயலலிதா. அது இனிமேலும் தொடரும். அதிமுகவிற்காக உண்மையாக உழைப்பவர்களுக்கும், உயர்வு கொடுத்து மகிழ்ந்தார் ஜெயலலிதா. அது இனிமேலும் தொடரும். ஜெயலலிதாவின் ஆட்சி உண்மையான மக்கள் ஆட்சி என்ற உறுதி எப்பொழுதும் தொடர வேண்டும். அதிமுக மேலும், மேலும் வளர வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் துணை வேண்டும் என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.