தினகரன் ஆதரவு எம்எல்ஏ வீட்டில் சிபிசிஐடி சோதனை

தர்மபுரி: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, தினகரனுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது நெருங்கிய நண்பரான, நாமக்கல் காண்ட்ராக்டர் சுப்ரமணியம் ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் சுப்ரமணியம் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து சுப்ரமணியம் எழுதிய கடிதங்கள், சிபிசிஐடி போலீசார் வசம் சிக்கியது. அதில் தமிழக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், தற்போதைய பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தினகரன் ஆதரவு எம்எல்ஏவான பழனியப்பன் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு முறை சம்மன் அனுப்பப்பட்டு, நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழனியப்பன், நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 2வது முறை அனுப்பிய சம்மனுக்கு அவர், ஆஜராகவில்லை. இந்நிலையில் எம்எல்ஏ பழனியப்பனை தேடி, கர்நாடகாவில் உள்ள ரிசார்ட்டுக்கு நேற்று சிபிசிஐடி போலீசார் சென்றனர். ஆனால் எம்எல்ஏ பழனியப்பன் அங்கு இல்லாததால், அவரது ஊரான பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள மோளையானூருக்கு வந்தனர். அங்கு அவரது 2 வீடுகளிலும் நேற்று மாலை போலீசார் சோதனை செய்தனர். மேலும், அதிவிரைவுப்படை போலீசாரும் ரோந்து போலீசாரும் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை கண்காணித்து தீவிரமாக தேடும் வண்ணம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.