மாதேஸ்வரன் மலை பகுதியில் கனமழை : பாலாற்றில் செந்நிறத்தில் சீறிப்பாயும் புதுவெள்ளம்

மேட்டூர்: தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள மாதேஸ்வரன் மலைப்பகுதியில் பெய்த கனமழையால், பாலாற்றில் செந்நிறத்தில் புதுவெள்ளம் சீறிப்பாய்ந்தோடி வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஓராண்டுக்கு பின் 75 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி  நீர்பிடிப்பு பகுதிகளிலும், கர்நாடக சுற்றுவட்டார  பகுதிகளிலும் கடந்த 2 மாதமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே, காவிரி ஆற்றுப்படுகைகளில்  பெய்யும் மழையால், ஒகேனக்கல் காவிரியில் செம்மண்  நிறத்தில் புதுவெள்ளம் நுங்கும், நுரையுமாக வந்து  கொண்டிருக்கிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று மாலை 3 மணி நிலவரப்படி, நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதனிடையே, தமிழக  கர்நாடக எல்லையில் உள்ள மாதேஸ்வரன் மலை மற்றும் பாலாற்று பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த பாலாற்றில், இருகரைகளையும் தொட்டவாறு, புதுவெள்ளம் செந்நிறத்தில் பெருக்கெடுத்தோடி வருகிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருவதால், நேற்று முன்தினம் விநாடிக்கு 11,880  கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 20,179 கனஅடியாக  அதிகரித்தது. மாலை 4 மணி நிலவரப்படி, விநாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக  அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 700 கனஅடி வீதம் தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. வரத்தை விட தண்ணீர் திறப்பு குறைவாக இருப்பதால், அணையின்  நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 73.44 அடியாக  இருந்த நீர்மட்டம், நேற்று 75.26 அடியாக உயர்ந்தது. ஓராண்டுக்கு பின்னர்,  மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியை தாண்டியுள்ளது. இதன்மூலம் ஒரே  நாளில் 1.82 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 37.39  டிஎம்சியாக உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.