100 பேர் பணிபுரியும் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

தடுப்பூசி இயக்கத்தை விரைவுப்படுத்தும் விதமாக தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2021 ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நீட்டித்ததை தொடர்ந்து, இந்தப் பிரிவில் உள்ள மக்களை தடுப்பு மருந்து எளிதாக சென்றடைவதற்கான முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இப்பிரிவில் உள்ளவர்களில் குறிப்பிட்ட அளவினர் அலுவலகங்கள் (அரசு மற்றும் தனியார்) அல்லது உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் பணிபுரிவதால், அவர்களின் பணியிடங்களிலேயே தடுப்பு மருந்து வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

image
2021 ஏப்ரல் 11 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் அவர்களது பணியிடங்களிலேயே தடுப்பூசி போடப்படும். இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், தகுதியுடைய மற்றும் தடுப்பு மருந்து எடுத்து கொள்ளும் ஆர்வம் உள்ள சுமார் 100 பேர் பணிபுரியும் இடங்களில் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.

இந்த செயல்பாட்டில் மாநிலங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், மாநில மற்றும் மாவட்ட திட்ட மேலாளர்களுக்கு உதவுவதற்கும் வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மாவட்ட பணிக்குழு மற்றும் நகர்ப்புற பணிக்குழு இத்தகைய பணியிடங்களை கண்டறியும். பணியிடங்களின் நிர்வாகம் தொடர்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பணியிடங்களில் தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ள அனுமதியில்லை.

தடுப்பு மருந்து பெறுவதற்கு முன்னர் பயனாளிகள் கோ-வின் தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களில் தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும். தனியார் பணியிடங்களில் தனியார் மையங்களில் வசூலிக்கப்படும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் பெறப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.