தேர்தல் கமிஷன் நோட்டீஸ் பாஜ தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கவில்லை: உதயநிதி ஸ்டாலின் பதில்

சென்னை: தமிழக சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளீர்கள். அதற்கு நான் தெரிவிக்கும் மறுப்புதான் இந்த கடிதம். இந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் சரியானவை அல்ல. அதனால் அதை சட்டப்படியாக மறுக்க உரிமை உள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி தாராபுரத்தில் நான் பேசிய பேச்சில் இடம் பெற்ற இரண்டு வரிகளை மட்டும் எடுத்து சொல்லப்பட்டுள்ளது. எனது முழுமையான பேச்சைக் கேட்டால்தான் நான் கூற வந்த கருத்தின் பொருள் புரியும் என்பதால் முழு பேச்சையும் வெளியிட வேண்டும். அதன்பேரில்தான் நான் எனது பதிலை தெரிவிக்க முடியும். பாஜ சார்பில் ஏப்ரல் 2ம் தேதி அளிக்கப்பட்ட புகார் குறித்து எனக்கு தெரிவிக்கவில்லை. அதை எனக்கு காட்ட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளின் படி குறிப்பிட்ட ஒரு தலைவரையோ, பணியாளரையோ விமர்சனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஒரு கற்பனையானது. எனது முழு பேச்சையும் கேட்கவேண்டும். ஆனால் குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது, முழு பேச்சையும் கேட்டால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஆகாது. கடந்த மார்ச் 30ம் தேதி தாராபுரத்தில் அதிமுக-பாஜ கூட்டணிக்கு பிரச்சாரம் செய்து பேசிய பிரதமர் நரேந்திரமோடி பேசும் போது, நான் திமுகவில் குறுக்கு வழியை பயன்படுத்தியதாக என்மீது குற்றம் சாட்டிப் பேசினார். பிரதமரின் பேச்சுக்கு பதிலளித்துத்தான் நான் 31ம் தேதி தாராபுரத்தில் பேசினேன். என்மீது பிரதமர் சாட்டிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்துத்தான் பேசினேன், அப்போது பிரதமர் நரேந்திர மோடிதான் குறுக்கு வழியை பயன்படுத்தி பாஜவில் உள்ள  மூத்த தலைவர்களை புறந்தள்ளிவிட்டு குஜராத்தின் முதல்வராக வந்தார் என்று தெரிவித்தேன். அப்போது பாஜவின் மூத்த தலைவர்கள் அத்வானி, யஸ்வந்த் சின்கா, மறைந்த சுஷ்மாசுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி ஆகியோரை குறிப்பிட்டேன். இதைத் தவிர அழுத்தம் மற்றும் தொந்தரவு என்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை. எனது முழு பேச்சும் தமிழில்தான் பேசினேன். நீங்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளுக்கு தமிழில் வேறு அர்த்தம் வரும். நான் குறிப்பிட்டபடி அழுத்தம் என்ற சொல்லுக்கு, பாஜ தலைவர்கள் சிலர் பாஜவின் தலைமைப் பதவிக்கு வராமல் தடுப்பதாகவும், பிரமதர் வேட்பாளர் இடத்தையும் குறிக்கும். அதேபோல தொல்லை என்ற சொல்லுக்கும் மன அழுத்தத்தை குறிக்கிறது அதன் மூலம் மற்றவர்கள் பிரதமர் பதவிக்கு வராமல் இருக்கும் அழுத்தம் என்று பொருள். நீங்கள் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளதுபோல நான் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிப்பிட்டு பேசவில்லை. அதைப்பற்றியும் அதில் குறிப்பிடவில்லை. அதனால் நீங்கள் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ் மொட்டையாவும், தெளிவில்லாமலும் இருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை. என்னைப் பற்றி விமர்சனம் எழுந்ததால் அதற்கு பதிலளித்தேனே தவிர மற்றபடி ஏதும் இல்லை. இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் என்னைப் பற்றியும் எனது குடும்பத்தைப் பற்றியும், மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்து மறைந்த எனது தாத்தாவைப் பற்றியும் அதிக அளவில் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தும் அது குறித்து நான் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.