`கோவிட்-19 : 2-ம் அலை தீவிரமடைய காரணமாகும் தமிழ்நாடு... மத்திய அரசின் அதிர்ச்சி புள்ளிவிவரம்!

கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவைத் தாக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள், பரிசோதனை, சிகிச்சை என அனைத்தையும் தீவிரப்படுத்தியதால் முதல் அலையின் தீவிரம் மிகவும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்பட்டது.

பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல், விழாக்கள், பண்டிகைகள் என மக்கள் கூட்டம் கூட்டமாக இருப்பது அதிகரித்தது. பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணிவதையும் கடைப்பிடிப்பதில்லை.

Public crowd

இதுபோன்ற காரணங்களால் இரண்டாம் அலையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இரண்டாம் அலையின் தீவிரத்தைப் பறைசாற்றும் விதமாக மத்திய சுகாதாரத் துறை முக்கிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 1-ம் தேதி 504.4 நாள்களாக இருந்த `இரட்டிப்பாகும் காலம் (Doubling Time) மார்ச் 23-ம் 202.3 நாள்களாகக் குறைந்துள்ளது.

அதென்ன இரட்டிப்பாகும் காலம்?

தீவிர நோய்ப்பரவல் காலத்தில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக எடுத்துக்கொள்ளும் நேரத்தைதான் இரட்டிப்பாகும் காலம் என்று குறிப்பிடுகின்றனர்.

அதாவது, இன்றைய தினம் 100 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டால் அடுத்த 100 பேர் எண்ணிக்கையைத் தொட எத்தனை நாள்கள் ஆகின்றன என்பதைக் கணக்கிட்டுக் கூறப்படுகிறது. இரட்டிப்பாகும் நாள்களின் இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க நோய்ப்பரவல் குறைந்து வருகிறது என்று அர்த்தம்.

COVID-19 testing center in New Delhi, India

இந்தியாவைப் பொறுத்தவரையில் இரட்டிப்பாகும் காலம் குறைந்து வருகிறது. எனில், நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது என்பது உறுதியாகிறது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட விவரத்துக்குப் பின்னால் 6 மாநிலங்களின் பங்களிப்பு காணப்படுகிறது. இந்தியாவின் மொத்த கோவிட்-19 நோயாளிகளில் 80.90 சதவிகிதம் பேர் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தாம்.

மேலும், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு, சத்தீஸ்கர், கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களில் நாள்தோறும் பதிவாகும் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருதாகவும் மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. மத்திய அரசு குறிப்பிட்டுள்ள இரண்டு பட்டியலிலும் தமிழகம் இடம் பிடித்திருப்பது கவலைக்குரியது.

தமிழகம்

Also Read: கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யலாமா? #ExpertExplains

மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், மக்கள் நெருக்கடி உள்ள இடங்களைத் தவிர்த்தல், தீவிர பரிசோதனை, தடுப்பூசி ஆகியவற்றை அரசும் பொதுமக்களும் தீவிரப்படுத்தினால்தான் இரண்டாம் அலையின் தீவிரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். இல்லையென்றால் நிலைமை கையை மீறிப் போய்விடும் எனப் பொது சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.