வடிகால் வசதி இல்லை கழிவுநீரால் துர்நாற்றம் வீசும் சீர்காழி...

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பிரதான தொழிலான மீன்பிடி தொழில் கொண்ட சீர்காழியில் விவசாயம் சார்ந்த தொழிலும் உள்ளது. நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை பிரித்தபோது சீர்காழி சட்டமன்ற தனி தொகுதி மயிலாடுதுறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தொகுதியில் தற்போது 2,51,779 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,23,899, பெண்கள் 1,27,868, இதர 12 பேர் என கூடுதல் பெண் வாக்காளர்கள் தொகுதியாகவும் இருந்து வருகிறது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக எம்எல்ஏவாக பாரதி உள்ளார். இவரை எதிர்த்து திமுக சார்பில் கிள்ளை ரவீந்திரன் போட்டியிட்டார்.தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வரும்போது பணிவு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆர் பாடிய பாடலுக்கு பதிலாக, எம்எல்ஏ பாரதி பணிவை காற்றில் பறக்க விட்டார். தொகுதியில் பாதாள சாக்கடை திட்டம் இதுவரை கொண்டு வரவில்லை. இதனால் நகர் முழுவதும் வடிகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளது. தேங்கிய இந்த கழிவு நீரால் கடந்த 10 வருடமாக துர்நாற்றம் தான் வீசுகிறது. சீர்காழி தொகுதி முழுவதும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் முழுமை பெறாமல் உள்ளது. இதனால் தொகுதி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கட்டிட வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் 10 ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு போதிய கட்டிட வசதி, விளையாட்டு மைதானம் இதுவரை ஏற்படுத்தவில்லை. கொள்ளிடம் ஆற்றில் ஆண்டுதோறும் 120 டிஎம்சி தண்ணீர் வீணாக சென்று கடலில் கலந்து வருகிறது. இதனை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த திட்டத்திற்கு ஆய்வு செய்ததோடு சரி, அதற்கன நிதி எதுவும் இதுவரை ஒதுக்கீடு செய்யவில்லை. இதுதவிர பாசன வாய்க்கால்கள் ஆறுகள் முழுமையாக தூர்வாரவில்லை என்ற குற்றச்சாட்டும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அவசரத்துக்கு தான் செல்போன் என்பதை அறியாமல், செல்போனில் எம்எல்ஏவை அவசரத்திற்கு அழைக்கும்போது எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொகுதி முழுவதும் பேசப்பட்டு வருகிறது. சீர்காழி தொகுதியை சீரழித்துவிட்டார் எம்எல்ஏ என்கின்றனர் தொகுதி மக்கள்.* ‘காற்றில் பறக்க விட்ட எம்எல்ஏ வாக்குறுதிகள்’2016ல் திமுக சார்பில் போட்டியிட்ட கிள்ளை ரவீந்திரன் கூறும்போது, ‘திருவாலி ஏரியில் படகு விட்டு சுற்றுலாத்தலமாக மாற்றுவேன். கொடியம் பாளையத்தையும் சுற்றுலாத்தளமாக மாற்றுவேன் என எம்எல்ஏ பாரதி, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியானது காற்றில் பறக்க விட்ட கதையாகத்தான் உள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி, பொறியியல் கல்லூரி இதுவரை கொண்டு வரவில்லை. கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட எந்த நடவடிக்கையும் இல்லை. திருமுல்லைவாசல் கடல் பகுதியில் தூண்டில் வளைவு செயல்படுத்தவில்லை. பழையார் மீன்பிடி துறைமுகத்தை விரிவுபடுத்தவில்லை. கொள்ளிடத்தில் அனைத்து வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அரசு மருத்துவமனை கொண்டு வரவில்லை. சீர்காழி நகருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை இல்லை. மொத்தமாக சொல்லப்போனால் சீர்காழி தொகுதியில் ஆக்கபூர்வமான பணிகள் இதுவரை செய்யவில்லை’ என்றார்.* தொகுதிக்கு அதிக நிதி பெறப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது...சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ பாரதி கூறும்போது, ‘சீர்காழி அரசு மருத்துவமனையில் ஐந்தரை கோடி ரூபாய் செலவில் 100 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. திருநகரியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க ரூ.37 கோடி செலவில் கதவணை கட்டும் பணி துவங்க உள்ளது. தென்னாம்பட்டினம் நாட்டுக்கண்ணி உப்பனாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க ரூ.9.75 கோடி செலவில் கதவணை கட்டும் பணி துவங்கியுள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் ரூ.50 லட்சம் செலவில் நெல்விதை சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. சீர்காழி தாலுகா அலுவலகம் கட்ட ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. அண்ணன் பெருமாள் கோயில் பகுதியில் வட்டார போக்குவரத்து கழகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலேயே சீர்காழி தொகுதிக்கு அதிக நிதி பெறப்பட்டு பல்வேறு பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.