திடீர் மழையால் சேதமடைந்த நெல் கொள்முதல் செய்ய சிறப்பு அனுமதி: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: திடீர் மழையால் சேதமடைந்த நெல்லை கொள்முதல் செய்ய சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருத்தாசலம், பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழை நீரில் மூழ்கி விட்டன. விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர் மழை காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முழுமையாக சேதமடைந்து விட்டன. இவற்றை விற்பனை செய்ய முடியாவிட்டால் உழவர்கள் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாவார்கள். எனவே, தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.