KKR v DC: அசால்ட் சால்ட், வருண் `சுழல்வர்த்தி; போராடிய அக்ஸர், குல்தீப்; டெல்லியை வென்ற கொல்கத்தா!

புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கடைசி இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியிருக்கும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் கொல்கத்தாவில் நடைபெற்ற இப்போட்டியில் மோதின. இரண்டு அணிகளுமே பத்து புள்ளிகளுடன் இருப்பதால், கொல்கத்தா அணி வென்றால் இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொள்ளும். டெல்லி வென்றால் ஆறாவது இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு ஒரேயடியாகத் தாவி, அடுத்தடுத்த போட்டிகளைச் சுவாரஸ்யமாக்கும்.

இந்நிலையில், டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டெல்லி அணி சார்பாக குமார் குஷாக்ரா ஐ.பி.எல்-லில் அறிமுகமானார். முகேஷ் சர்மாவிற்குப் பதிலாக ரஷீக் தாரும் களமிறங்கினார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் வீரரான குமார் குஷாக்ரா, முதல் தரப் போட்டிகளில் வெளிப்படுத்திய அட்டகாசமான ஆட்டங்களால் கவனிக்கப்பட, அவரை 7.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது டெல்லி அணி. கொல்கத்தா அணியில் ரகுவனன்ஷி மற்றும் சமீராவுக்குப் பதிலாக வைபவ் அரோரா மற்றும் மிட்சல் ஸ்டார்க் அணிக்கு திரும்பினர்.

KKR v DC

டெல்லி அணிக்கு பிரித்வி ஷாவும், ஃப்ரேஸர் மெக்கர்க்கும் தொடக்கம் கொடுத்தனர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் பவுண்ட்ரிக்கு அனுப்பினார் பிரித்வி ஷா. அந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தன. ரைட்ரா, இன்னைக்கு தீபாவளிதான்! வைபவ் அரோரா வீசிய 2வது ஓவரின் 3வது பந்தில் விக்கெட் கீப்பர் சால்ட்டிடம் கேட் ஆகி வெளியேறினார் பிரித்வி ஷா. அபிஷேக் போரல் களமிறங்கினார். வைபவ் அட்டகாசமாக வீச, அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தன. ஸ்டார்க்கின் 3வது ஓவரில் வீசப்பட்ட ஷார்ட் பாலில் ஒரு சிக்ஸர் விளாசினார் ஃப்ரேஸர். அடுத்த பந்து பவுண்ட்ரி. அதற்கடுத்த பந்தே ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் ஆனார் ஃப்ரேஸர். ஃப்ரேஸரின் வருகைக்குப் பின் பெரிய ஸ்கோர்களை டெல்லி அணி பெற்றுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வைபவ்வின் 4வது ஓவரில் ஹோப்பும் போல்டு ஆக, 37 ரன்களுக்கு 3 விக்கெட்கள் டெல்லி இழக்க, கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களின் கைகளுக்குள் சென்றது போட்டி. அணியை மீட்க வேண்டிய பொறுப்பு, கேப்டன் பண்ட் மற்றும் போரலின் கைகளுக்குச் சென்றது. ராணா வீசிய 5வது ஓவரில் 4, 6, 4 என வங்காள மண்ணின் மைந்தன் போரல் விளாச, 16 ரன்கள் கிடைத்தன. நரைனின் 6வது ஓவரில் 9 ரன்கள் கிடைக்க, பவர்ப்ளே முடிவில் 67 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது டெல்லி. ஹர்ஷித் ராணா வீசிய 7வது ஓவரில் ஸ்கூப் செய்ய முயன்று, ஸ்டெம்புகளைப் பறிகொடுத்தார் போரல். நரைனின் 8வது ஓவரில் 5 ரன்கள், வருண் சக்ரவர்த்தியின் 9வது ஓவரில் 7 ரன்கள் கிடைத்தன. 22 பந்துகளாக பவுண்டரிகள் இல்லாமல் கொல்கத்தாவின் சுழலுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருந்தது டெல்லி.

KKR v DC

வைபவ்வின் 10வது ஓவரில் அடுத்தடுத்து கிடைத்த பவுண்ட்ரிகளால் 13 ரன்கள் சேர, ஓரளவிற்கு நம்பிக்கையை தனக்குதானே ஏற்படுத்திக்கொண்டது டெல்லி. அந்த நம்பிக்கையில் மூன்று லாரி மண்ணள்ளிப் போட்டது போல, பண்ட்டின் விக்கெட் விழுந்தது. வருண், 11வது ஓவரின் முதல் பந்திலேயே பண்ட்டை வெளியேற்றினார். அந்த ஓவரில் 1 ரன் மற்றும் நரைனின் 12வது ஓவரில் 5 ரன்கள் கிடைத்தன. வருணின் 13வது ஓவரின் முதல் பந்தில் ஸ்டப்ஸ் வெளியேற, அந்த ஓவரில் 2 ரன்கள் கிடைத்தன. நரைனின் 14வது ஓவரில் அக்ஸரும் இன்சைட் எட்ஜில் போல்டு ஆகி நடையை கட்ட, அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 101 ரன்களுக்கு 7 விக்கெட்கள். மீண்டும் டெல்லியைச் சுழலில் சுற்றி வளைத்தது கொல்கத்தா. டெல்லி அணியின் இளம் வீரர் குமார் குஷாக்ரா மீது கவனம் சென்றது.

ஆனால், வருணின் கூக்லியில் குமார் குஷாக்ராவும் ஆவுட் ஆக, டெல்லி அணியின் பேட்டிங் ஆர்டர் மொத்தமாகச் சரிந்தது. ஸ்டார்க்கின் 16வது ஓவரில் குல்தீப் அதிரடி காட்ட, 16 ரன்கள் கிடைத்தன. டெல்லியை 160+க்கு கொண்டு செல்லத் தனியாளாகப் போராடிக்கொண்டிருந்தார் குல்தீப். ஹர்ஷித் ராணாவின் 17வது ஓவரில் 8 ரன்கள். வைபவ்வின் 18வது ஓவரில் 3 ரன்கள். ஹர்ஷின் ராணாவின் 19வது ஓவரில் ரஷீக் கேட்ச் ஆகி வெளியேறினார். ரஸல் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தை பவுண்ட்ரிக்கு அனுப்பினார் குல்தீப். அந்த ஓவரில் 10 ரன்கள் கிடைக்க, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது டெல்லி.

KKR v DC
டெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து சரிய, சுதாரிக்காத மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சுழலுக்குப் பலியாக, கடைசியாக வந்த குல்தீப் மட்டும் 26 பந்துகளுக்கு 35 ரன்கள் சேர்த்து, டெல்லியை ஓரளவிற்குக் கரைசேர்த்தார். நடப்பு ஐ.பி.எல் பேட்ஸ்மேன்களின் கேம் என்ற நிலையில், நான்கு ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்தினார் வருண் சக்ரவர்த்தி. நரைனும் 4 ஓவர்களுக்கு 24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இருவரின் சுழலும் டெல்லியை கட்டுக்குள் வைத்திருந்தது.
KKR v DC

154 என்ற எளிதான எளிய இலக்கைத் துரத்திய கொல்கத்தாவிற்கு, சால்ட்டும் நரைனும் தொடக்கம் கொடுத்தனர். வில்லியம்ஸ் வீசிய முதல் ஓவரில் நோ பால், ஒயிடு, ஃப்ரி ஹிட் என எல்லா எக்ஸ்ட்ராஸ்களையும் கொடுக்க, சால்ட்டும் தன் பங்கிற்கு பவுண்ட்ரிகள் விளாச, முதல் ஓவரில் 23 ரன்கள் கிடைத்தன. கலீல் வீசிய முதல் பந்தில் சால்ட் கொடுத்த கேட்ச்சைத் தவறவிட்டார் முதல் ஓவரை வீசிய வில்லியம்ஸ். ஆனாலும், அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தன. வில்லியம்ஸ் வீசிய 3வது ஓவரில் மீண்டும் சால்ட் வாணவேடிக்கை காட்ட, 13 ரன்கள் கிடைத்தன. 3 ஓவர்கள் முடிவில் 40 ரன்கள் எடுத்து, வலுவான அடித்தளத்தை அமைத்தது கொல்கத்தா. கலீல் வீசிய 4வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கிடைத்தாலும், ரஷீக் வீசிய 5வது ஓவரில் பவுண்ட்ரிகள் பறக்க, 15 ரன்கள் கிடைத்தன.

கலீல் வீசிய 6வது ஓவரை சால்ட் பவுண்ட்ரிகளால் பாகம் குறிக்க, 18 ரன்கள் குவிந்தன. 26 பந்துகளில் 4 சிக்ஸர்களின் உதவியுடன் அரை சதம் கடந்தார் சால்ட். பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி, 79 ரன்கள் குவித்து ராஜா பகவத் மாதிரி உட்காரத் தொடங்கியிருந்தது கொல்கத்தா. ஆனால், அக்ஸர் வீசிய 7வது ஓவரின் முதல் பந்தைத் தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆகி வெளியேறினார் நரைன். லோயர் மிடில் ஆர்டர் ஹிட்டரான ரிங்கு, 3வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கினார். குல்தீப் வீசிய 8வது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தன. 9வது ஓவரில் களத்தில் கதகளி ஆடிக்கொண்டிருந்த சால்ட்டை வெளியேற்றி, டெல்லிக்குச் சிறிது நம்பிக்கையைத் தூவினார் அக்ஸர் படேல். வில்லியம்ஸும் ரிங்குவை வெளியேற்ற, டெல்லி கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்து உட்கார்ந்தது. ரிங்குவை முன்னமே இறக்கிய யுத்தி கொல்கத்தாவிற்குக் கைகொடுக்காமல் போனது.

KKR v DC

10 ஓவர்கள் முடிவில் 104-3. 60 பந்துகளுக்கு 50 ரன்கள் என்ற எளிய இலக்கோடு, ஸ்ரேயாஸ் ஐயரும், வெங்கடேஷ் ஐயரும் களத்திலிருந்தனர். அக்ஸர் வீசிய 11வது ஓவரில் 9 ரன்கள், குல்தீப் வீசிய 12வது ஓவரில் 8 ரன்கள் என வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தது கொல்கத்தா. அடுத்து ரஷீக் வீசிய 13வது ஓவரை பவுண்ட்ரியுடன் தொடங்கி, 9 ரன்களைத் தேற்றியது கொல்கத்தா. இரண்டு பிக் ஓவர்களில் இலக்கை எட்டி, ரன்ரேட்டை உயர்த்த முயலாமல், நிதானமான ஆட்டத்தையே ஆடிக்கொண்டிருந்தது கொல்கத்தா. குல்தீப் வீசிய 14வது ஓவரில் 4 ரன்கள், அக்சர் வீசிய 15வது ஓவரில் 7 ரன்கள் எனத் தட்டித்தட்டி எடுத்தது கொல்கத்தா.

KKR v DC

குல்தீப் வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்ஸரோடு 10 ரன்கள் கிடைக்க, வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. ரஷீக் வீசிய 17வது ஓவரில் சிக்ஸோடு, இலக்கை அடைந்து வெற்றிபெற்றது கொல்கத்தா. 16.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்திருந்தது கொல்கத்தா. சால்ட்டின் அதிரடியான தொடக்கமும், 38 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்த சால்ட் - நரைன் பார்ட்னர்ஷிப்பும் கிட்டத்தட்ட கொல்கத்தாவின் வெற்றியை உறுதி செய்திருந்தன. 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை அழுத்தமாகத் தக்க வைத்துக்கொண்டது கொல்கத்தா.

பிளேஆஃப்க்கு எந்த நான்கு அணிகள் செல்லும்? உங்களின் கணிப்பை கமென்ட்டில் சொல்லுங்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.