செயற்கை குளத்தில் இறங்கிய கள்ளழகர்... இது மாணவர்கள் நடத்திக்காட்டிய மினி சித்திரை திருவிழா!

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வுகள் நிறைவடைந்து லட்சக்கணக்கான மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் ஒரு சித்திரைத் திருவிழாவை நடத்தி அசத்தியிருக்கின்றனர் பள்ளி மாணவர்கள்.

மாணவர்கள் நடத்திய சித்திரைத் திருவிழா

மதுரை கோவில்பாப்பாகுடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து முழு சித்திரைத் திருவிழாவையும் அப்படியே நடத்திக்காட்டினர். மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் வைகையில் கள்ளழகர் இறங்குவது உள்ளிட்ட நிகழ்வுகளை, திருவிழாவின் மினியேச்சர்போல தத்ரூபமாக நடத்திக் காட்டியுள்ளனர்.

இதற்காக தங்க குதிரை போல தயார் செய்யப்பட்ட வாகனத்தில், கள்ளழகர் வேடமணிந்த மாணவர் அமர்ந்து கொள்ள, அவரோடு, கோயில் பட்டர்போல வேடமணிந்த மாணவரும் ஏறிக்கொண்டார். எதிர் சேவையை நினைவுபடுத்தும் விதமாக, சீர்பாத தூக்கிகள் போல தலையில் பாகை கட்டிய 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி வளாகத்திற்கு வெளியே கள்ளழகரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

மாணவர்கள் நடத்திய விழா

கள்ளழகருக்கு முன்பாக கருப்பசாமி வேடமிட்ட மாணவர்கள் அரிவாள் ஏந்தி ஆடியபடி சென்றனர்.

பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் ஊழியர்கள் காய்கறி, தேங்காய், பூ, பழம் மற்றும் மாலைகள் கொண்ட தட்டுகளை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். குழந்தைகள், மயிலிறகு விசிறிகளையும் எடுத்து வந்து கூட்டத்தின் நடுவே விசிறி விட்டது, திருவிழா கூட்டத்திற்குள் இருக்கும் எண்ணத்தை உண்டாக்கும் விதமாக இருந்தது.

மினியேச்சர் சித்திரைத் திருவிழா

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக, விளையாட்டு மைதானத்தின் நடுவில் செயற்கைக் குளமும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் கள்ளழகர் இறங்க, மாணவர்கள் தங்களிடமிருந்த தண்ணீர் துப்பாக்கியால் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டாடினர்.

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது. மீனாட்சி திருக்கல்யாணம் நடப்பது போலவே சிறிய அரங்கம் அமைத்து அதில் விநாயகர், முருகன் என தத்ரூபமாக மீனாட்சி திருக்கல்யாணம் செய்து காட்டினர்.

இந்த திருவிழாவில் பள்ளி மாணவர்களால், சின்னச் சின்ன ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் கிடைத்த பணம், ஆதரவற்ற குழந்தைகள், காப்பகத்தில் இருக்கும் முதியவர்களுக்கு வழங்கப்பட்டது.

பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.