மும்பை, கோவா, கர்நாடகா, தெலங்கானா... மும்பை போலீஸாரை 4 நாள்கள் அலையவிட்ட நடிகர் சாஹில் கான்!

மகாதேவ் புக் சூதாட்ட செயலியில் நடந்த பண மோசடி தொடர்பான வழக்கை அமலாக்கப் பிரிவும், மும்பை சைபர் பிரிவு போலீஸாரும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். மகாதேவ் புக் செயலி மற்றும் அதனோடு தொடர்புடைய சூதாட்ட செயலிகளை பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூர், ஸ்ரத்தா கபூர், சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ் போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் விளம்பரப்படுத்தி இருக்கின்றனர். அதில் நடிகர் சாஹில் கான் என்பவரும் ஒருவர் ஆவார். அவருக்கு மகாதேவ் செயலியின் பணமோசடியில் தொடர்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராக மும்பை போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கிடைக்காதத்தால் மும்பையை காலி செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவரை சத்தீஸ்கரில் போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்து மும்பைக்கு கொண்டு வந்துள்ளனர். அவரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

நடிகர் சாஹில் கான்

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவர் கடந்த 25-ம் தேதி மும்பையை காலி செய்துவிட்டு கோவாவிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கர்நாடகா மாநிலம், ஹுப்பாலி என்ற இடத்திற்கு சென்றார். அங்கிருந்து ஐதராபாத் சென்றார். அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு சுற்றி இருக்கிறார். அவர் ஐதராபாத்தில் இருப்பதை மும்பை போலீஸார் மோப்பம் பிடித்ததை தொடர்ந்து உடனே அவசர அவசரமாக காரில் சத்தீஸ்கர் புறப்பட்டு சென்றார். அதுவும் இரவு நேரத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த சாலை வழியாக டிரைவரை காரை ஓட்டும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால் டிரைவர் காரை ஓட்ட மறுத்தார். அப்படி இருந்தும் கட்டாயப்படுத்தி காரை ஓட்டச்செய்தார். ஆனால் அவர் சத்தீஸ்கர் மாநிலம், ஜக்தல்பூரில் உள்ள ஓட்டலில் பதுங்கி இருந்த போது பிடிபட்டார். 72 மணி நேரம் சாஹில் கானை மும்பை போலீஸார் விரட்டிச்சென்று கைது செய்துள்ளனர். தனக்கு மகாதேவ் புக் செயலியுடன் நேரடித்தொடர்பு கிடையாது என்று சாஹில் கான் தெரிவித்துள்ளார். நான்கு நாட்கள் ஐந்து மாநிலங்களில் 1,800 கிலோமீட்டர் சாஹில் கான் காரில் ஓடிக்கொண்டே இருந்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.