அமித் ஷா போலி வீடியோ விவகாரம்; தெலங்கானா முதல்வருக்கு சம்மன் அனுப்பிய டெல்லி காவல்துறை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஒரு வீடியோ வைரலானது. அதில், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள் (SC), பிற்படுத்தப்பட்டவர்கள் (ST), பழங்குடிகள் (OBC) ஆகிய இட ஒதுக்கீடுகளை ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வோம் என அமித் ஷா பேசியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அமித் ஷா அப்படி பேசவில்லை என்றும், அந்த வீடியோ டீப் ஃபேக் செய்யப்பட்டது என்றும் பாஜக-வினர் கூறினர். இதற்கிடையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அமித் ஷா

இந்த நிலையில், நேற்று டெல்லி காவல்துறையிடம், ``தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்திற்கு விரோதமானது அதை நீக்குவது குறித்து அமித் ஷா பேசிய பழைய வீடியோ தவறாக சித்திரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவை தெலங்கானா காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தது. அதைத் தொடர்ந்து பல கட்சித் தலைவர்கள் அதைப் பகிர்ந்திருக்கிறார்கள்" என பா.ஜ.க குற்றம்சாட்டி புகார் அளித்தது.

இந்த புகாரின் அடிப்படையில், அந்த வீடியோவைப் பதிவேற்றிய கணக்குகளின் விவரங்களைப் பகிருமாறு எக்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களிடம் டெல்லி காவல்துறை கேட்டுள்ளது. மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் சிறப்புப் பிரிவு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, இன்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பயன்படுத்திய அனைத்து மின்னணு உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு, விசாரணைக்காக மே 1-ம் தேதி ஆஜராகும்படி டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது.

ரேவந்த் ரெட்டி - பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்

இது தொடர்பாக இன்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,``பா.ஜ.க-வும், பிரதமர் மோடியும் டெல்லி காவல்துறையை தனது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துகின்றனர். ED, CBI, Income Tax Department-க்கு பிறகு, நரேந்திர மோடி டெல்லி காவல்துறையை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறார். ஆனால், இதற்கு இங்கு யாரும் பயப்படப் போவதில்லை. இதுபோன்ற தந்திரங்களுக்கு பதில் சொல்லும் ஆட்கள் எங்களிடம் இருக்கிறார்கள். மோடியையும் அமித் ஷாவையும் இந்த லோக் சபா தேர்தலில், குறிப்பாக தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் தோற்கடிப்போம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.