சென்ற வாரம் சூரத் இந்த வாரம் இந்தூர்... தேர்தலுக்கு முன்பாக பாஜக-வில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளர்!

நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தற்போது, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மே 7-ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பாகவே குஜராத்தின் சூரத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

சூரத் - முகேஷ் தலால் (பாஜக) - நிலேஷ் கும்பானி (காங்கிரஸ்)

அதாவது, சூரத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் அவரை முன்மொழிந்த 5 பேரில் மூன்று பேர், வேட்புமனுவிலிருப்பது தங்களது கையெழுத்து இல்லை, அது போலியானது எனக் கூறியதையடுத்து அந்த வேட்புமனு ரத்து செய்யப்பட்டது.

மேலும், அந்தத் தொகுதியில் களமிறங்கியிருந்த பகுஜன் சமாஜ் வேட்பாளர் உட்பட மற்ற அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெறவே, பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதோடு, வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ் நிலேஷ் கும்பானி பா.ஜ.க-வில் இணையப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து, நிலேஷ் கும்பானியை காங்கிரஸ் ஆறு வருடங்களுக்கு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது.

காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காந்தி பாம் - இந்தூர்

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் தொகுதியில் பா.ஜ.க சிட்டிங் எம்.பி ஷங்கர் லால்வானிக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காந்தி பாம் இன்று தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்று பா.ஜ.க-வில் இணைந்தது பேசுபொருளாகியிருக்கிறது.

इंदौर से कांग्रेस के लोकसभा प्रत्याशी श्री अक्षय कांति बम जी का माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी, राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda जी, मुख्यमंत्री @DrMohanYadav51 जी व प्रदेश अध्यक्ष श्री @vdsharmabjp जी के नेतृत्व में भाजपा में स्वागत है। pic.twitter.com/1isbdLXphb

— Kailash Vijayvargiya (Modi Ka Parivar) (@KailashOnline) April 29, 2024

இது குறித்து, இந்தூர் பா.ஜ.க எம்.எல்.ஏ கைலாஷ் விஜயவர்கியா தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாமை, பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் மோகன் யாதவ், மாநில தலைவர் வி.டி. ஷர்மா ஆகியோரின் தலைமையின் கீழ் பா.ஜ.க-வுக்கு வரவேற்கிறோம்" என அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் ட்வீட் செய்திருக்கிறார்.

மே 13-ம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 96 நாடாளுமன்றத் தொகுதிகளில் இந்தூர் தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.