Mike Hussey: எதிரணியினர் எந்தத் திட்டம் போட்டாலும் அதை துபே முறியடிப்பார்; அவர் எங்கள் சொத்து!

நேற்று சன்ரைஸர்ஸ் அணிக்கு எதிராகச் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவற்றின் தொகுப்பு இதோ,

ரஹானே கம்பேக் கொடுப்பார்

கேள்வி: ரஹானே தொடர்ந்து ஒற்றை இலக்க ஸ்கோர்களில் அவுட்டாகி வருகிறாரே. என்ன தவறு நடக்கிறது என நினைக்கிறீர்கள்?

ஹஸ்ஸி: "அவரிடமிருந்து சிறப்பான இன்னிங்ஸ் மிக அருகில் இருப்பதாகவே நான் பார்க்கிறேன். நல்ல வீரர்களுக்கு டி20 கிரிக்கெட்டில் அவ்வப்போது இப்படி நடப்பது இயல்புதான், எப்படியும் ஒரு கட்டத்தில் தங்கள் திறமையை நிரூபித்து காட்டிவிடுவார்கள். ரஹானே நல்ல மனநிலையில் இருக்கிறார். சிறப்பாகப் பயிற்சி செய்கிறார். அணியாக நாங்களும் அவர் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர் அனுபவம் நிச்சயம் பலன் கொடுக்கும். எந்த ஒரு வீரர் சிறப்பாக ஆடாமல் இருந்தாலும் மிக விரைவிலேயே தங்களை நிரூபித்து காட்டப்போகிறார்கள் என்று நம்பிக்கை வைப்போம். நீண்டகாலமாகவே அதுதான் எங்களது அணுகுமுறை."

Ajinkya Rahane

டெரில் மிட்செல் - இது வெறும் ஆரம்பம்தான்

கேள்வி: மிட்செல் இன்று சிறப்பான இன்னிங்ஸை ஆடியிருந்தார். அவர் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டார். அவரைப் பற்றிச் சொல்லுங்க!

Daryl Mitchell

ஹஸ்ஸி: "மிட்செல்லும் ரச்சினும் அணியில் புதிய வீரர்கள். அவரைப் போன்ற சர்வதேச வீரர்கள் வந்ததும் அணியில் செட்டாகி சிறப்பாக ஆட வேண்டும் என்றுதான் நாம் அனைவரும் எதிர்பார்ப்போம். ஆனால் உண்மையில் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உலகின் சிறந்த டி20 தொடரில் வந்ததும் சிறப்பாக ஆடுவது கடினமான ஒன்று. இதற்கு முன்பு மிட்செல்லிடமிருந்து சிறந்த இன்னிங்ஸ் ஒன்று வரவில்லை என்றாலும் எதோ ஒரு வகையில் அனைத்து போட்டிகளிலும் தனது பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். பேட்டிங் ஆர்டரில் அவர் மேலே கீழே என மாறி மாறி இறக்கப்பட்டிருக்கிறார். அதுவே ஒரு பேட்டரின் ஆட்டத்தைக் கொஞ்சம் தடுமாறச் செய்துவிடும். இப்போது நம்பர் 3-ல் தனது ரோல் என்ன என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக ஆடத் தொடங்கியிருக்கிறார். இன்று ருத்துராஜுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார். இது ஆரம்பம்தான். தொடர்ந்து அப்படி ஆடுவார் என்றே எதிர்பார்க்கிறோம். அவரது தன்னம்பிக்கையும் இப்போது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. சிறப்பாகப் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்."

தேவையான அளவு அதிரடி போதும்!

கேள்வி: மிடில் ஓவர்களில் மிகக்குறைவான ரன்கள் அடிக்கும் அணிகளுள் ஒன்றாகச் சென்னை இருக்கிறது. ஆனால், இன்று கொஞ்சம் அது மாறியிருப்பதைப் பார்த்தோம். இந்த மாற்றம் திருப்தியளிக்கிறதா?

Mike Hussey

ஹஸ்ஸி: "இடத்திற்கும் பிட்ச்சுக்கும் ஏற்றார் போல தங்களை மாற்றிக்கொண்டு சிறப்பாக ஆடுவதில் பெருமிதம் கொள்ளும் அணி நாங்கள். 260, 275 போன்ற ஸ்கோர்கள் இந்த ஐபிஎல்லில் அடிக்கப்படுவதை நாங்களும் பார்க்கவே செய்கிறோம். ஆனால், அந்த மைதானங்களுக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு. இங்கு பௌண்டரிகளின் அளவு பெரியது, பிட்ச்சும் சில நேரங்களில் மெதுவாகவே இருக்கும் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும். பனிப்பொழிவு இருந்தால் மட்டுமே இந்த நிலை மாறும். கொல்கத்தா, டெல்லி போன்ற பேட்டர்களுக்குச் சாதகமான மைதானங்களில் எடுத்ததும் அதிரடி காட்ட முயற்சி செய்யலாம். இங்கு அப்படியில்லை. இங்கு இருக்கும் சூழலுக்கு ஏற்ப சிறப்பாக, தேவையான அளவு அதிரடியாகவே ஆடியிருக்கிறோம் என்றே நினைக்கிறேன். கடந்த போட்டியில் 200 அடித்தும் பனி (Dew) அதிகமாக இருந்ததால் போட்டியைத் தோற்றோம். அதனால் இம்முறை முதல் பேட்டிங்கில் சற்றே அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைத்தோம். முதல் 10 ஓவர்களில் அதிக விக்கெட்களை இழக்கவில்லை என்பதால் மிடில் ஓவர்களில் இன்னும் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தோம்."

துபே எங்கள் சொத்து!

கேள்வி: துபேவுக்குப் புதிதாகத் திட்டங்களுடன் வருகிறார்கள். ஆனால், அனைத்தையும் தாண்டி சிறப்பாக ஆடிவிடுகிறாரே, என்ன மாதிரியான பயிற்சிகளை அவர் மேற்கொள்கிறார்?

Shivam Dube

ஹஸ்ஸி: "எதிரணிகள் அவருக்காக என்ன திட்டங்களுடன் வருவார்கள் என நாங்கள் முன்பே கணித்து அதற்காக துபேவைத் தயார் செய்து வருகிறோம். முதலில் ஷார்ட் பந்துகள் வீச முயற்சி செய்தார்கள். அதை சிறப்பாகக் கையாண்டுவிட்டார். இப்போது வைடாக மெதுவாகப் பந்துவீசப் பார்க்கிறார்கள். அதற்கும் அவரிடம் திட்டங்கள் இருக்கின்றன. பயிற்சியிலேயே இதையெல்லாம் கணித்து அதற்கேற்ப பயிற்சியை மேற்கொள்கிறார் துபே. அவரிடம் அபரிவிதமான பலம் இருக்கிறது, எளிதில் சிக்ஸர்கள் அடிக்கிறார். அவர் எங்கள் அணியின் சொத்து."

ருத்துராஜிடம் அந்தப் பக்குவம் இருக்கிறது

கேள்வி: எதிர்முனையில் இருப்பவர்கள் திணறினாலும் ருத்துராஜ் நன்றாக ஆடுகிறார். ரிஸ்க்குகள் எடுக்காமல் நல்ல வேகத்தில் ரன்கள் குவிக்கிறார். அவரது ஆட்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

Ruturaj Gaikwad

ஹஸ்ஸி: "இதற்கு நான் எப்படி பதில் சொல்வது எனத் தெரியவில்லை. என் பதில் ஒருதலைபட்சமாகவே இருக்கும். ஏனென்றால் நானே பெரிய ருத்துராஜ் ரசிகன். பந்தைச் சிறப்பாக டைம் செய்வதில் அவர் கில்லாடி. எப்படி ஃபீல்டில் இருக்கும் இடைவெளிகளைப் பார்த்து துல்லியமாக ஆடுகிறீர்கள்? என்று நானே அவரிடம் கேட்டிருக்கிறேன். திறமை மட்டுமல்லாமல் சூழலைப் புரிந்துகொண்டு ஆடும் பக்குவமும் அவரிடம் இருக்கிறது. எப்போது அடித்து ஆட வேண்டும், எப்போது பொறுமை காக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரிகிறது. வேகப்பந்து, சுழற்பந்து என இரண்டையுமே சிறப்பாகக் கையாள்கிறார். கேப்டனாக இருந்துகொண்டே இதைச் செய்கிறார். டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனின் இடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறார். கேப்டனாக ஏகப்பட்ட விஷயங்களை அவர் கவனித்தாக வேண்டும். ஆனால், அவை எதுவுமே அவரது பேட்டிங்கைத் துளியும் பாதிக்கவில்லை. ருத்துராஜ் தனது தனித்துவம் மாறாமல் இப்படிச் சிறப்பாக ஆடுவது பென்ச்சில் இருக்கும் இளம் வீரர்களுக்கும் பெரிய பாடமாக இருக்கிறது."

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.