LSGvsRR: ``குந்தர தந்திர மந்திரமொன்னும் அறியில்லடா கலக்கும் `சஞ்சும்மல் பாய்ஸ்! ராஜஸ்தான் வெற்றி

``அந்த காலம் அது அது 160 காலம்... இந்த காலம் இது இது 260 காலம்..." என சமீபத்திய ஐ.பி.எல் T20 போட்டிகள் 300 எனும் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சீசன் போட்டிகளில் "நாங்க அடி வாங்காத எரியாவே கிடையாது" என பவுளர்களின் கதி "அந்தோ பரிதாபம்" எனும் சொல்லும் அளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் புள்ளிப்பட்டியல்களில் 1வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்தின. முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிக்கு பிளே ஆப் தகுதி சுற்றில் மற்றொரு வாய்ப்பு இருப்பதால், இந்தப் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்க டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பில்டிங்கைத் தேர்வு செய்தார்.

Sanju Samson

தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ராகுல் களமிறங்க ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார். ஏற்கெனவே போல்ட் vs டி காக் என ஒரு தனிப் போட்டி போய்கொண்டிருக்க முதல் இரண்டு பந்துகளைத் தொடர்ந்து ஃபோருக்கு அனுப்பினார் டி காக். ஆனால் மூன்றாவது பந்தில் ஸ்டம்புகள் சிதற இம்முறை தர்மயுத்தத்தில் நானே வெற்றியாளன் என உற்சாகமாக விக்கெட்டை கொண்டாடினார் போல்ட். அடுத்த பந்திலே மீண்டும் ஒரு விக்கெட் வாய்ப்பு வர இன்சைட் எட்ஜ் ஆகி எல்.பி.டபிள்யூவில் தப்பித்தார் ஸ்டாய்னிஸ். ஆனால் அடுத்த ஓவரிலே சந்தீப் சர்மாவின் மிரட்டலான இன் ஸ்விங்கரில் "குவாக்" சொல்லி டக் அவுட் ஆகி வெளியேறினார். 11-2 என்ற மோசமான தொடக்கத்தால் லக்னோ அணி தடுமாறியது. டயர் வண்டியைத் தட்டி தட்டி விழாமல் கொண்டு செல்வது போல மற்றொரு விக்கெட் பவர்பிளேயில் விழாமல் பாதுகாத்தது கே.எல்.ராகுல், தீபக் ஹூடா கூட்டணி . இதனால் 46-2 என்ற நிலையை எட்டியது லக்னோ.

டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு திடீரென காலியான ரோட்டை பார்த்து ஆக்சிலேட்டரை அழுத்துவது போல அவேஷ்கானின் ஓவரை பார்த்தவுடன் டாப் கியரை போட்டு 6,6,4 என 8வது ஓவரில் 21 ரன்களை சேர்த்தார் கே.எல்.ராகுல்.

அதே போல ஒப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி 4000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பட்டியலில் இணைந்தவர், 10வது ஓவரில் 31 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். மறுமுனையில் சிக்ஸர்களுக்கு ஆசை வைக்காமல் தரையோடு தரையாக போல்ட், சாஹல் என இருவரையும் வெளுத்து வாங்கிய ஹூடா 30 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இந்த பார்ட்னர்ஷிப் 115 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை அடைய இந்தக் கூட்டணியை தனது சுழலால் பிரித்தார் அஸ்வின். இதனால் 13 ஓவர் முடிவில் 135-3 ரன்களை எடுத்தது LSG. அதேபோல தனது நான்கு ஓவரை முடித்த சாஹால் இந்த சீசனில் முதல் முறையாக விக்கெட் இல்லாமல் தனது ஸ்பெல்லினை முடித்தார்.

RRvsLSG

வழக்கமாக அதிரடியாக விளையாடும் நிக்கோலஸ் பூரன் மந்தமாக 10 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே அடிக்க சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் போல்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறிது நேரத்தில் ராகுலும் அவேஷ் கான் பந்தில் வெளியேற 76 (48). 178-5 என்ற நிலைமைக்கு வந்தது லக்னோ. டெத் ஓவர்களில் வழக்கமாக பவுலர்களுக்கு நடக்கும் "சீன் எல்லாம் இங்கு கிடையாது" என அற்புதமாக 18, 19-வது ஓவரை வீசிய ஆவேஷ், போல்ட் வெறும் 13 ரன்களை மட்டுமே கொடுத்தனர். இறுதி ஓவரிலும் ஒரு ஃபோரினை மட்டுமே சந்தீப் ஷர்மா கொடுக்க "ஓடி ஓடி உழைக்கணும்" என குருனால் பாண்டியா 15 (11) , ஆயுஷ் பதோனி 18 (13) ஆகியோர் இரண்டு இரண்டு ரன்களாக எடுத்து 196-5 என்ற ரன்களை சேர்த்தனர். கடைசி 16 பந்துகளில் வெறும் 23 ரன்கள் மட்டுமே சென்றிருந்தது.

"இது 15 ஓவருக்கே பத்தாதேடா" என்று ஐ.பி. எல் நிலைமை மாறிபோய் இருக்க களத்துக்குள் வந்தனர் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஜோடி. மேட் ஹேண்ரியின் தொடக்க ஓவரிலே ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் என வெளுத்து வாங்கினார் ஜெய்ஸ்வால். மறுமுனையில் பட்லரும் அடித்து ஆட 5 ஓவருக்கு 50 ரன்கள் சேர்த்தது இந்த கூட்டணி. நிலைமை சீராக போய்கொண்டிருக்க யாஷ் தக்கூர் வீசிய புல் டாஸ் பந்தில் லேக் ஸ்டெம்ப் தெறிக்க வெளியேறினார் பட்லர் 34(18). அடுத்து ஸ்டாய்னிஸ் வீசிய பவர்பிளே முடிந்த அடுத்த பந்திலே வெளியேறினார் ஜெய்ஸ்வால்24(18). இதனால் 60-2 என்ற நிலைமையை எட்டியது RR. இந்த சீசனில் பிரமாதமாக விளையாடி வரும் மேட்ச் வின்னர் ரியான் பராக் இம்பேக்ட் பிளேயராக உள்ளே வந்த அமித் மிஸ்ரா சூழலில் ஆயுஷ் படோனியிடம் கேட்ச் ஆனார். 10 ஓவர் முடிவில் 88-3 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான்.

சஞ்சு சாம்சன்

விக்கெட் சரிவினால் இந்த ஆட்டத்தில் இன்னும் உயிர் இருக்கிறது என்று தான் நாம் நினைத்திருந்தோம். ஆனால் 4 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சாம்சன், துருவ் ஜூரேலிடம் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த ரன்ரேட்டினை " ஏ கோவிந்தசாமியோ.... என்னடா தூக்கம் " என தட்டி எழுப்பினர். மிஸ்ராவின் 11வது ஓவரில் ஆரம்பித்து அதிரடி காட்டத் துவங்கியவர்கள், அடுத்த நான்கு ஓவரில் பவுண்டரி மழைகளாக பொழிந்து தள்ளினர். குறிப்பாக மோஷின் கான் வீசிய 14வது ஓவரில் தனது பெட்டினால் 4,6,4,4 என போஸ்டல் பின்கோடு போட்டு ஜூரேல் வெற்றிக்கான டெலிவரி அட்ரஸினை சுலபமாக எழுதினார்.

இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் லக்னோ பவுலர்கள் திணறிக் கொண்டிருக்க "குந்தர தந்திர மந்திரமொன்னும் அறியில்லடா" என ரவி பிஷ்னோய் ஓவரில் 4,4,6 என தன் பங்குக்கு வானவேடிக்கைகள் காட்டினார் சேட்டன் சஞ்சு. அவர் பேட்டை சுழற்றிய விதம் உலகக்கோப்பை தேர்வில் என் பெயர் நியாபகம் இருக்கட்டும் என்பது போலவே இருந்தது. இருவரும் ஆட்டத்தின் 18வது ஓவரில் இருவரும் தங்கள் அரைசதத்தை பூர்த்தி செய்ய 186-3 என்று வெற்றிக்கு வெறும் 10 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலைக்கு ஆட்டம் வந்தது.

மீதம் 6 பந்துகள் இருக்கும் நிலையிலே இலக்கை அடையும் விதத்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் சஞ்சு. 4வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்து ஜூரேல் 52(34) , சாம்சன் 72(33) கடைசி வரை களத்தில் நின்றனர். இந்த வெற்றியின் மூலம் தனது 9 போட்டிகளில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே பெற்று அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறது சஞ்சும்மல் பாய்ஸின் ராஜஸ்தான் ராயல்ஸ்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.