CSK: ஆஸ்தான ஓப்பனர்; சாம்பியன் வீரர்; கான்வேயின் இல்லாமையும் சிஎஸ்கேவும்!

காயம் காரணமாக டெவன் கான்வே இந்த ஐபிஎல் சீசனிலிருந்து வெளியேறியிருக்கிறார். அவருக்குப் பதிலாக சிஎஸ்கே அணியில் புதிதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ரிச்சர்ட் க்ளீசன் களமிறங்குகிறார்.

சிஎஸ்கே அணியின் முக்கியமான ஓப்பனிங் பேட்ஸ்மேனான டெவன் கான்வே 23 போட்டிகளில் விளையாடி 924 ரன்கள் வரை அடித்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் டெவன் கான்வேவுக்கு இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக வர் இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் கசிந்து இருந்தது. பிறகு, இந்தத் தொடரின் பாதியிலிருந்து அவர் விளையாடுவார் என்று கூறப்பட்டது.

Chennai Super Kings

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக டெவன் கான்வே பங்கேற்க மாட்டார் என்று நேற்று (ஏப்ரல் 18) அதிகாரபூர்வமாகவே ஐபிஎல் நிர்வாகம்  அறிவித்துவிட்டது. சிஎஸ்கே அணியில் டெவன் கான்வே இல்லாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை அணியில் எப்போதுமே ஒரு வெளிநாட்டு ஓப்பனர் இருப்பார். அவர் அணியின் வெற்றியில் தவிர்க்கமுடியாத பங்களிப்பை கொடுக்கக்கூடியவராக இருப்பார். மேத்யூ ஹேடன்,பிரண்டன் மெக்கல்லம்,ஸ்மித், வாட்சன், டூப்ளெஸ்சிஸ் என இந்த ட்ரெண்ட்டுக்கு பல உதாரணங்களை சொல்லலாம். இவர்கள் எல்லோருமே மேட்ச் வின்னர்கள். இந்த டூப்ளெஸ்சிஸ் ஆர்சிபி க்கு சென்று சேர்ந்த பிறகு அந்த இடத்தை நிரப்பியவர்தான் டெவன் கான்வே. மூன்று ஃபார்மட் கிரிக்கெட்டிலும் ஆடும் வல்லமை பொருந்திய அவருக்கு சென்னை அணியும் சேப்பாக்கம் மைதானமும் புது உத்வேகமாக அமைந்தது. ஏறக்குறைய ஒன்றரை சீசனில்தான் சென்னை அணிக்காக களத்தில் இறங்கி ஆடியிருக்கிறார்.

டெவன் கான்வே

ஆயினும் தனது பக்குவமான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தை ஈர்த்திருந்தார். ருத்துராஜோடு அவருக்கு முழுமையாக ஒத்துப்போனது. இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக காம்ப்ளிமென்ட் செய்து ஆடுவர். கடந்த சீசனில் மட்டும் 16 போட்டிகளில் 672 ரன்களை 139 ஸ்ட்ரைக் ரேட்டில் கான்வே எடுத்திருந்தார். ஏறக்குறைய ஒவ்வொரு 3 போட்டிகளுக்கும் ஒரு முறை ஒரு அரைசதம் என்கிற ரீதியில் அடித்திருந்தார். சென்னை அணியை சாம்பியபாக்கியதில் கான்வேயின் மட்டை வீச்சுக்கு பெரிய பங்கிருந்தது. இந்த சீசனில் அவருக்கு பதிலாக ரச்சின் ரவீந்திரா ஓப்பனிங் இறங்குகிறார்.

அவர் அதிரடியாக ஆடுகிறார். ஆனாலும் கான்வேயின் இடத்தை அப்படியே அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை. கான்வே எல்லா சூழலுக்குமான வீரர். குறிப்பாக பேட்டிங் ஆட கடினமாக இருக்கும் களங்களில் கூட பக்குவத்தோடு தனித்துவமாக ஆடக்கூடியவர். கான்வேவை எந்த சூழலிலும் நம்பலாம். ரச்சினிடம் இதெல்லாம் மிஸ்ஸிங். சென்னை அணி தொடர்ந்து வென்று கொண்டே இருந்தாலும் கான்வே இல்லாதது ஒரு குறையாகத் தெரிந்துகொண்டேதான் இருக்கிறது.

டெவன் கான்வேவை பொறுத்தவரை நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. எலியாட், வேக்னர், காலின் மன்றோ வரிசையில் இவரும் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்தவர். தென்னாப்பிரிக்காவில் தொடர்ந்து 8 ஆண்டுகள் உள்ளூர் போட்டிகளில் ஆடியிருக்கிறார். ஆனால், தென்னாப்பாரிக்காவின் தேசிய அணியில் இடம்பிடிக்கமுடியவில்லை. தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் கடைபிடிக்கப்படும் பூர்வக்குடி வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டால் பல வெள்ளையின வீரர்கள் நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர்.

டெவன் கான்வே

அந்த வரிசையில் வந்தவர்தான் டெவன் கான்வே. 2017-ம் ஆண்டு முதல் நியூஸிலாந்தில் வெல்லிங்டன் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த இவர் டி20 தொடரில்  வெல்லிங்டன் ஃபயர் பேர்ட்ஸ் அணிக்காக களமிறங்கி சிறப்பாக ஆடினார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்தத் தொடரின் ப்ளேயர் ஆஃப் தி இயர் அவார்டை கான்வே வென்றிருக்கிறார். அந்த ஆண்டு சூப்பர் ஸ்மாஷ் தொடரில் வெல்லிங்டன் அணிதான் சாம்பியன். இறுதிப்போட்டியில் 93 ரன்களை அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் நியூஸிலாந்துக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஐசிசி கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதமே கான்வே நியூஸிலாந்து அணிக்காக ஆடுவதற்கான ஒப்புதலை அளித்துவிட்டது. கடந்த நவம்பரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 போட்டியில் கான்வே அறிமுகமானார்.

டெவன் கான்வே

அந்த போட்டியில் 29 பந்துகளில் 41 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். கான்வே திறமைமிக்க வீரராக இருந்தாலும் 2021 ஆம் ஆண்டு ஆஸிதிரேலியாவுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம்தான் அவர் மீது வெளிச்சத்தை பாய்ச்சியது. 32 வயதேயான கான்வே இதுவரை 98 சர்வதேச போட்டிகளில் விளையாடி 4081 ரன்களை எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெவன் கான்வே இல்லாதது சென்னை அணிக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.