EP07 தெரிந்த தேர்தல்... தெரியாத சுவாரஸ்யங்கள்: இந்திராவின் `கம்பேக்’கும் 7-வது பொதுத்தேர்தலும்!

`மண்ணில் விழுந்த அலை... மீண்டும் மேலெழும்பத்தானே செய்யும்! - என்பதைப்போல கடந்த தேர்தலில் இந்திரா காந்திக்கு அதிர்ச்சிப் படுதோல்வியைப் பரிசளித்த மக்கள், இந்த முறை அரியணையேற்றி ஆச்சர்யத்தைக் கொடுத்தனர். எமர்ஜென்சி காலக் கொடுமைக்காக எந்த இந்திராவைப் பழிவாங்க நினைத்தார்களோ, அதே இந்திராவுக்கு ஜனதா ஆட்சியில் கொடுக்கப்பட்ட எமர்ஜென்சி தண்டனைகளுக்காகப் பரிதாபப்பட்டனர். ஜனதா ஆட்சியில் பல்வேறு சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எதிர்பாராத பல சந்தர்ப்பவாத சம்பவங்களும், நாற்காலி யுத்தங்களும் நடந்து மூன்றே ஆண்டுகளில் ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்தது. காங்கிரஸுக்கு மாற்றாக வந்த ஜனதா, மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது ஏன்?

நகர்வோம்... நாற்பதாண்டுகளுக்குப் பின்னால்!

ஜனதா அரசாங்கம்

இந்திராவின் எமர்ஜென்சியின்போது சிறைக் கொடுமைகளை அனுபவித்திருந்த தலைவர்கள்தான் ஜனதா அமைச்சரவையின் பிரதமர் பதவி தொடங்கி மத்திய அமைச்சர்கள் பதவிகள் வரைக்கும் அலங்கரித்திருந்தனர். அவர்களில், முக்கியத் துறைகளின் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருந்த சோஷலிஸ்ட் தலைவர்கள் பலர் அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்டப் பணிகளையும், சில அதிரடி நடவடிக்கைகளையும் கொண்டுவந்தனர். குறிப்பாக, மத்திய ரயில்வேதுறை அமைச்சராக இருந்த மது தண்டவதே, பழுதடைந்துபோயிருந்த 5,000 கி.மீ ரயில்வே பாதையைச் சீரமைத்தார். 60-க்கும் மேற்பட்ட பகல் நேர ரயில்களை அறிமுகப்படுத்தினார். ஊழல்களைத் தடுக்கும் வகையில், முதன்முறையாக கணினி வழி டிக்கெட் முன்பதிவு திட்டத்தைக் கொண்டுவந்தார். மிக முக்கியமாக, வசதி படைத்தவர்கள் பயணிக்கும் முதல் வகுப்பு ரயில் பெட்டிகளுக்கு நிகராக, நடுத்தர ஏழை மக்கள் பயணிக்கும் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளைத் தரம் உயர்த்தினார். மரப்பலகை இருக்கை, படுக்கைகளுக்கு மாற்றாக மெத்தைகளால் ஆன படுக்கைகளை சாமானிய மக்களுக்காக உருவாக்கித்தந்து கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற வழிவகுத்தார்.

மேலும் முக்கியமாக, எமர்ஜென்சியின்போது இந்திரா தனக்கேற்றபடி வளைத்துப்போட்டிருந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களும் நேர்செய்யப்பட்டன. குறிப்பாக, சட்டத்துறை அமைச்சர் சாந்தி பூஷண், இந்திரா கைவைத்த சட்டத் திருத்தம் 42-ஐ மாற்றி, சட்டப்பிரிவு 43, 44 எனப் புதிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம், மத்திய அரசின் அதீத அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டு, உச்ச நீதிமன்ற உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டன. ஜனாதிபதி ஆட்சிக்காலம் கட்டுப்படுத்தப்பட்டு, சட்டமன்ற, நாடாளுமன்றப் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பது உறுதிசெய்யப்பட்டது. அசாதாரண ஆயுதப் போராட்டமன்றி, பிற சாதாரண அமைதியின்மைக்கெல்லாம் அவசரநிலை அறிவிப்பதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இந்தச் சட்டத் திருத்தங்களெல்லாம் அதே இந்திரா காந்தியின் ஆதரவுடனேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. ஜனதாவுக்கு மாநிலங்களவையில் போதுமான பெரும்பான்மை இல்லை என்பதால், இந்திராவின் காங்கிரஸ் ஒத்துழைப்புடன் இவை சட்டமாக்கப்பட்டன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சமூகம், கல்வி, பொருளாதாரரீதியாக பின்தங்கியிருக்கும் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு - OBC) சமூக மக்களைக் கண்டறிந்து, சமூக நீதி அடிப்படையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் பி.பி.மண்டல் தலைமையிலான, `மண்டல் கமிஷன் முதன்முறையாக அமைக்கப்பட்டதும் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா ஆட்சியில்தான்!

மொரார்ஜி தேசாய்

`சமூக நீதிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது ஜனதா ஆட்சியில்...’ என்று சொல்வது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு ஜனதா ஆட்சியில் சமூக அநீதியும் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடியது. கடந்த பத்தாண்டுக்கால இந்திராவின் ஆட்சியில் தலித்துகளுக்கெதிரான தாக்குதல்களின் எண்ணிக்கை 40,000 என்றால், ஜனதாவின் முதல் ஓராண்டு ஆட்சியிலேயே சுமார் 17,000-க்கும் அதிகமான தாக்குதல்கள் தலித்துகளுக்கெதிராக நிகழ்ந்தன. குறிப்பாக, 1978-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த தலித் மக்கள் யானையின் மீது அம்பேத்கர் புகைப்படத்தை வைத்து மாலை, மரியாதையுடன் ஊர்வலம் சென்றனர். அதைக் கண்டு பொறுக்க முடியாத ஆதிக்கச் சாதியினர் ஊர்வலம் சென்றவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு, தலித் மக்களும் தாக்குதல் நடத்தவே மோதல் பெரிதாகி, வன்முறை தாண்டவமாடியது. இறுதியில், ராணுவம் வந்த பிறகே பதற்றம் தணிந்தது.

அதற்கடுத்து, 1978, ஜூலை மாதம் மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்திலுள்ள மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டும் என அந்தப் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் கோரிக்கை விடுக்க, அரசும் அதற்கான முயற்சிகளில் இறங்கியது. இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்கச் சாதியினர் பட்டியலினக் குடியிருப்புகளைத் தாக்கி, அவர்களின் குடிசைகளுக்குத் தீ வைத்தனர். சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வீடுகளை இழக்க, அரசின் பெயர் மாற்ற முயற்சியும் கைவிடப்பட்டது.

பெல்ச்சி கிராமத்துக்கு யானை மீது ஏறிவந்த இந்திரா

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவையே உலுக்கியெடுத்தது `பெல்ச்சி படுகொலை சம்பவம். 1977, மே மாதம் பீகாரிலுள்ள பெல்ச்சி கிராமத்தில் பட்டியலின (பாஸ்வான்) நிலமற்ற விவசாயிகளுக்கும், ஆதிக்க (குர்மி) நிலவுடைமையாளர்களுக்கும் இடையேயான மோதலில், 8 பட்டியலின இளைஞர்கள் உட்பட 11 பேர் சுடப்பட்டும், தீயில் வீசியெறிந்தும் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டம், கடையடைப்பு, பள்ளி-கல்லூரிகள் மூடல், வேலை நிறுத்தம் என மாநிலமே ஸ்தம்பித்தது. அதுவரை தோல்வி முகத்தில் துவண்டிருந்த இந்திரா, இதுதான் சரியான தருணம் என எண்ணி உடனடியாக பெல்ச்சிக்குப் புறப்பட்டார். சாலை வசதிகளே இல்லாத மிகவும் பின்தங்கிய குக்கிராமத்துக்கு, கார், ஜீப், டிராக்டர், யானை என அனைத்து வழிமுறைகளிலும் கடுமையான பயணம் செய்து, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். ஏழை, பட்டியலின மக்களின் பாதுக்காப்புக்காக எந்த நடவடிக்கையையும் ஜனதா ஆட்சி எடுக்கவில்லை என அரசைக் குற்றம்சாட்டினார். இந்திராவின் இந்தப் பயணமும் பேச்சும் அவரை `ஏழைகளின் நண்பர், தலித்துகளின் பாதுகாவலர் என்ற அளவுக்கு பிம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதேசமயம், ஜனதா கட்சி அமைச்சர்கள் சிலர் மக்களுக்கான மாற்றத்தை மறந்து, மாட மாளிகைகள், ஆடம்பர விருந்துகள், விழாக்கள், வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் எனத் தங்களின் சொகுசு வாழ்க்கைக்குத் தோதாக அன்றாடங்களை மாற்றியமைத்துக்கொண்டிருந்தனர்.

இந்தச் சூழலில்தான் இந்திராவுக்குக் கடிவாளம் போடும்விதமாக, கடந்தகால வனவாசத்துக்குப் பழிக்குப் பழி தீர்க்கும்விதமாக எமர்ஜென்சி விவகாரத்தைக் கையிலெடுத்தது ஜனதா அரசாங்கம். தேர்தலில் வாக்குறுதி கொடுத்தபடி, `எமர்ஜென்சி நெருக்கடி நிலை கொடுமைகளுக்குக் காரணகர்த்தாவான இந்திரா காந்தி, தான் செய்த தவற்றுக்கான தண்டனையை பெற்றே ஆகவேண்டியவர் என ஜனதா கட்சித் தலைவர்கள் ஓரணியில் நின்று முழங்கினர். அதையடுத்து, எமர்ஜென்சி எல்லைமீறலை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.சி.ஷா தலைமையில் `ஷா கமிஷன் அமைக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், காங்கிரஸ் அமைச்சர்கள், அதிகாரப் புள்ளிகள், மேல்மட்டம், கீழ்மட்டம் என அனைத்துத் தரப்பினரும் விசாரிக்கப்பட்டனர். கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியமும் வாக்குமூலமும் கொடுத்தனர்.

ஆனால், இந்திரா காந்தியை விசாரிக்க ஷா கமிஷன் மூன்று முறை முயற்சி செய்தபோதும், ஒத்துழைப்பு வழங்க அவர் மறுத்துவிட்டார். மாறாக, `பிரதமர் பதவிப் பிரமாணத்தின்போது, ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டிருப்பதால், அதற்குட்பட்டு அரசாங்க ரகசியங்கள் எதையும் என்னால் வெளியிலோ, விசாரணை கமிஷன் முன்பாகவோ சொல்ல முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். ஷா கமிஷனைப்போலவே, சஞ்சய் காந்தியின் மாருதி கார் ஊழல், காங்கிரஸ் முதல்வர்களின் ஊழல்களைப் பற்றி விசாரிக்கவும் சுமார் 8 கமிஷன்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டன. (மேலும், எமர்ஜென்சியில் நீட்டிக்கப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான 9 மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு, தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதில் ஜனதாவே பெரும்பாலும் வாகை சூடியது).

ஷா கமிஷன்

இந்த நிலையில், இந்திராவுக்கு எதிரான எமர்ஜென்சி சாட்சியங்கள், ஆதாரங்கள், சி.பி.ஐ ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தியைக் கைதுசெய்ய அதிரடியாக உத்தவிட்டார் உள்துறை அமைச்சர் சரண்சிங். இதையடுத்து, 1977, அக்டோபர் 3-ம் தேதி இந்திரா காந்தியைக் கைதுசெய்த காவல்துறையினர், விசாரணைக்காக ஹரியானா மாநிலத்துக்கு வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, ரயில் கிராஸிங்குக்காக சாலையின் குறுக்கே கேட் போடப்பட்டிருக்க, காவல்துறையினரும் கேட் திறப்பதற்காகக் காத்திருக்க, உடனே இந்திரா காந்தி அந்தக் காரியத்தை செய்தார். வாகனத்தின் கதவைத் திறந்து வெளியே இறங்கிய இந்திரா, சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். `ஹரியானாவுக்குக் கொண்டு செல்லக் கூடாது; டெல்லியின் எல்லையைத் தாண்டி கூட்டிச் செல்ல காவல்துறைக்கு அதிகாரம் கிடையாது எனக் கூறி இந்திரா காந்தியும், அவருடைய வழக்கறிஞர்களும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அந்தப் பகுதியில் கூட்டம் கூடியது.

`இந்திரா காந்தி துன்புறுத்தப்படுகிறார், அவருக்குப் பாதுகாப்பில்லை என எட்டுத்திக்கும் செய்திகள் பரவின. இதையடுத்து, மீண்டும் டெல்லிக்கே வாகனத்தைத் திருப்பிய காவல்துறையினர், மறுநாள் காலை அவரை நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர். நீதிபதியும் `இந்திரா காந்தியின் கைது நடவடிக்கையில் பாதுகாப்புக் குறைபாடு இருக்கிறது; குற்றப்பத்திரிகையில் ஆதாரக் குறைபாடு இருக்கிறது என்று கூறி இந்திராவை விடுவித்தார். இந்தக் கைது நடவடிக்கை மக்களுக்கு இந்திரா மீது அனுதாபம் படரவும், ஜனதா மீது அதிருப்தி ஏற்படவும் தூபமிட்டது.

இந்தச் சூழலில், 1978 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்பாராத வெற்றி, இந்திரா காந்திக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கியது. விளைவு, கடந்த முறை வடக்கே ரேபரேலியில் போட்டியிட்டு தோற்றுப்போன இந்திரா, தெற்கே கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் செல்ல ஆயத்தமானார். 1978 அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சியின் முன்னாள் முதல்வர் வீரேந்திர பாட்டிலைத் தோற்கடித்து, 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் சிக்மகளுர் தொகுதி எம்.பி-யாக வெற்றிபெற்றார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, உற்சாகத்துடன் நாடாளுமன்றப் படிக்கட்டுகளில் ஏறிய இந்திராவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. `1974-ல் இந்திரா காந்தி ஆட்சியிலிருந்தபோது, அவருடைய மகன் சஞ்சய் காந்தியின் மீதான் ஊழல் குற்றச்சாட்டு விசாரணையைத் தடுத்ததோடு, அவருக்கு ஏதுவாக நாடாளுமன்றத்தையே தவறாகப் பயன்படுத்திய இந்திரா காந்தி தண்டிக்கப்பட வேண்டியவர். அவர்மீது அமைச்சரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனதா கட்சியின் நாடாளுமன்றக்குழு தீர்மானம் கொண்டுவந்தது. ஜனதாவின் இந்தக் கோரிக்கை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இறுதியில், பெரும்பான்மை ஆதரவுடன் இந்திரா காந்தி ஒரு வார காலம் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்பதால், அவரது எம்.பி பதவியும் பறிபோனது. இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக நாடாளுமன்றம் கூடி ஒருவரைச் சிறைக்கு அனுப்பியிருந்தது. இதனால், இந்திரா மீதான அனுதாப அலை இன்னும் அதிகரித்தது. அதுவரை எமர்ஜென்சியைக் கொண்டுவந்த `கொடுங்கோலர் இந்திரா என்றிருந்த கருத்து மாறி, `தியாகி இந்திரா காந்தி எனும் அளவுக்கு மக்களிடையே மனமாற்றத்தைக் கொண்டுவந்திருந்தது. அதேசமயம், ஜனதா மீதான அதிருப்தி அலையும் ஆழிப்பேரலையாக மக்கள் மனதில் கொந்தளித்தது.

இந்தியன் ஏர்லைன்ஸ்

இந்த நிலையில், தீடீரென `இந்தியன் ஏர்லைன்ஸ்- 410 விமானத்தை ஒரு கும்பல் கடத்திச் சென்றது. சரியாக 1978, டிசம்பர் 20-ம் தேதி டெல்லி பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாராகியிருந்த விமானத்தின் விமானிகள் மற்றும் பயணிகளை துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டிப் பணியவைத்த கடத்தல்காரர்கள், விமானத்தை உ.பி-யின் வாரணாசிக்குக் கொண்டு சென்று தரையிற

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.