`தேர்தல் முடிந்ததும் ரேவந்த் ரெட்டி பாஜக-வில் சேர்ந்துவிடுவார்! - தெலங்கானா முன்னாள் அமைச்சர் KTR

தெலங்கானாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ரேவந்த் ரெட்டி தலைமையில் களமிறங்கிய காங்கிரஸ் வெற்றிபெற்றது. மேலும், அந்தத் தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டியிடாமல் காங்கிரஸுக்கு ஆதரவளித்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா, காங்கிரஸின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அண்ணனுக்கு எதிராகக் காங்கிரஸில் இணைந்தார். பின்னர், ஆந்திர காங்கிரஸின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

ரேவந்த் ரெட்டி - ராகுல் காந்தி - கே.சி.வேணுகோபால்

இதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கணிசமான இடங்கள் வெல்லக்கூடும் என்று காங்கிரஸ் நம்பிக்கையோடு இருக்கிறது. இந்த நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததுமே காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க-வில் இணைந்துவிடுவார் என பாரத ராஷ்டிர சமிதி கட்சி செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, பாரத ராஷ்டிர சமிதியை நேற்று சாடிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, தன்னுடைய மகள் கவிதாவுக்கு ஜாமீன் கிடைக்கவும், காங்கிரஸைத் தோற்கடிக்கவும் சந்திரசேகர ராவ் தனது கட்சியினரின் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டதாகச் சாடியிருந்தார். ரேவந்த் ரெட்டியின் இத்தகைய விமர்சனத்துக்கு இன்றைய பொதுக்கூட்டத்தில் எதிர்வினையாற்றியிருக்கும் கே.டி.ராமராவ், ``ரேவந்த் ரெட்டி யாருக்காக வேலை செய்கிறார்... மோடிக்காகவா, ராகுல் காந்திக்காகவா...

தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமராவ்

என்னுடைய வார்த்தையைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மிகப்பெரிய கட்சித் தாவல் நடக்கும். ரேவந்த் ரெட்டி, 20 முதல் 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க-வில் இணைவார்" என்று கூறியிருக்கிறார்.

சந்திரசேகர ராவின் மகளும், தெலங்கானா மேலவை உறுப்பினருமான கவிதா, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் ஏப்ரல் 23 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.