`பாஜக-வினர் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் அறிவிக்கவில்லை? - ப.சிதம்பரம் கேள்வி!

"கச்சத்தீவை யாரும் எடுத்துக் கொள்ளவும் இல்லை, கச்சத்தீவை யாரும், யாருக்கும் தாரை வார்க்கவும் இல்லை..." என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு

சிவகங்கை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், "நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த சட்ட மசோதாக்களுக்கு அதிமுக  ஆதரவு தெரிவித்துவிட்டு, காலம் கடந்து தற்போது அதனை மழுப்பி பேசி வருகின்றனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பேசுபொருளாக மாறிவிட்டது. பாஜக-வின் தேர்தல் அறிக்கை மூன்று மணி நேரத்தில் புதைந்து விட்டது.

ப.சிதம்பரம்

எந்த வழிபாட்டு தளத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானித்துக் கொள்வோம். அதற்கு மோடி வழிகாட்டியாக இருக்க தேவையில்லை.

கச்சத்தீவு பிரச்னை ஒரு அரசியல் சித்து விளையாட்டு, பாஜக-வினர் தங்களது தேர்தல் அறிக்கையில் ஏன் கச்சத்தீவு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அது 50 ஆண்டுகளுக்கு முன்னால் முடிந்த பிரச்சனை என்பது பாஜக-வினருக்கும் தெரியும்.

கச்சத்தீவை யாரும் எடுத்துக் கொள்ளவும் இல்லை, கச்சத்தீவை யாரும், யாருக்கும் தாரை வார்க்கவும் இல்லை. கச்சத்தீவு இலங்கை கடல் பகுதியில் உள்ளதாக முடிவுக்கு வந்து, 50 ஆண்டுகளுக்கு ஆகிவிட்டது. கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது என்ற எந்த ஆவணமும் கொடுக்கப்படவில்லை.

செய்தியாளர் சந்திப்பில் ப.சிதம்பரம்

ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் என திமுக, அதிமுக கட்சிகள் கூறினாலும் அதற்கு அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் காங்கிரசின் திட்டம். ஆனால், பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சேது சமுத்திர திட்டம் நிறைவேற ஆட்சி மாறினால் காட்சி மாற வாய்ப்பு உண்டு.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சாதி, சமுதாய அடிப்படையில் வாக்கு கேட்பது மிகப்பெரிய அவமானம். ஒற்றுமையாக வாழும் மக்களுக்கு அவர்கள் செய்வது துரோகம். அதற்கு மக்கள் தெளிவான பதிலை கூறுவார்கள்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.