KPY Bala: ``ஹீரோவா மக்கள் என்னை ஏத்துக்கணும்!- KPY பாலா

`கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரிச்சயமானவர் பாலா. `குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கென தனி அடையாளத்தை பெற்றுத் தந்தது.

பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, பல குழந்தைகளை படிக்க வைப்பது எனத் தொடர்ந்து பாலா சமூக சேவை செய்து வருகிறார். சமூகவ லைதளப் பக்கங்களில் அவரது உதவும் பண்பை பலரும் பாராட்டி வருகின்றனர். 

பாலா - லாரன்ஸ்

சமீபத்தில் ஜீ தமிழில் `டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் நடுவராக நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார். பாலாவும் ராகவா லாரன்ஸும் இணைந்து உதவிய வீடியோக்களை பாலா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பார். முன்னரே அவர்கள் இருவரும் பரிச்சயம் என்பதால் ஜீ தமிழில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ராகவா லாரன்ஸுக்கு சர்ப்ரைஸ் செய்வதற்காக பாலாவை அழைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பாலாவிடம் `கெரியரில் என்ன ஆசை என்னவென ராகவா லாரன்ஸ் கேட்பார். அதற்கு பாலா `ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை என பதிலளிக்கவும், `ராகவேந்திரா புரொடெக்‌சன்ல நிறைய படம் பண்ணல... உனக்காக என் ஃப்ரெண்ட்ஸ் நிறைய புரொடியூசர்ஸ் இருக்காங்க... நல்ல காமெடி அண்ட் லவ் கதை பாலாவுக்கு பொருத்தமா இருக்கும். இதைப் பார்க்கிற டைரக்டர் யார்கிட்டயாச்சும் கதை இருந்தா சொல்லுங்கனு சொல்லியிருப்பார். அவர் சொல்லவும் பாலா நெகிழ்ந்து மேடையிலேயே அழுதிருப்பார். பாலாவிடம் இது குறித்துப் பேசினோம்.

"சாரை சர்ப்ரைஸ் பண்றதுக்காகத்தான் போனேன். ஆனா, அங்க என்னை சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்க. முதலில் சார் என்ன ஆசைன்னு கேட்கவும் தொண்டு செய்யணும்னு ஆசைன்னு சொன்னேன். கெரியரில் சொல்லுங்கன்னு சொல்லவும் உங்களை பக்கத்துல வச்சிக்கிட்டு இதை சொல்லக்கூடாது தான்... இந்த மூஞ்சி இந்த உடம்புக்கு வாய்ப்பு இருக்குமான்னு தெரியல.. எனக்கு ஹீரோவாகணும்னு ஆசைன்னு தயக்கத்தோடு தான் சொன்னேன். அவரோட இணைந்து நான் ஹீரோவாக நடிக்கப் போறேங்கிறது எனக்கு ரொம்ப எமோஷனலா இருக்கு. என் தகுதிக்கு மீறுன விஷயம்... என் கனவுக்கு மீறுன விஷயம் அது! நிறைய படங்களில் சைடுல நடிச்சிருக்கேன். ஆனா, அதெல்லாம் எடிட்ல போயிருச்சு. அப்படி நம்ம கூட நடிக்கிறவங்க எடிட்ல போகாம நாம பார்த்துக்கணுங்கிறது என் எண்ணம்.

KPY பாலா

சார் மேடையிலேயே `இந்த மாதிரி பையனெல்லாம் வளரணும்... இவன் இன்னும் பெருசாகணும்.. இன்னும் பலருக்கு உதவணும்னு சொன்னார். ஊர்ல ஒருத்தருக்கு ஹெல்ப் பண்ணலாம்... ஊருக்கே சார் ஹெல்ப் பண்ணியிருக்காரு. நாம நினைச்சுக் கூட பார்க்காத விஷயங்கள் எல்லாம் லாரன்ஸ் சார் பண்ணியிருக்காரு. அவர் கொடுத்த சர்ப்ரைஸில் இருந்து நான் இன்னமும் வெளியே வரவே இல்ல! மக்கள் என்னை ஹீரோவாக ஏத்துக்கணும்! அவ்வளவுதான்!" என்றார்.

வாழ்த்துகள் பாலா!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.