`சிறையில் கெஜ்ரிவாலை தீவிரவாதிபோல நடத்துகிறார்கள்! - திகார் சிறையில் சந்தித்த பஞ்சாப் முதல்வர்

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைதுசெய்தது. அதற்கு முந்தைய வாரம்தான், இதே வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை கைதுசெய்தது. தற்போது இருவருமே திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கெஜ்ரிவால்

இத்தகைய சூழலில், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல் 24-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 29-க்கு ஒத்திவைத்தது. இன்னொருபக்கம், கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அதனை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீட்டித்து இன்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்த பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான், சிறையில் ஒரு தீவிரவாதியைப்போல கெஜ்ரிவால் நடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். கெஜ்ரிவாலை சிறையில் சந்திப்பதற்கான பகவந்த் மானின் விண்ணப்பம் கடந்த வாரம் நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்று கெஜ்ரிவாலை அவர் சந்தித்தார். மேலும், இந்த சந்திப்பின்போது, கண்ணாடி தடுப்பால் பிரிக்கப்பட்ட அறையில் எதிரெதிர் பக்கத்திலிருந்து இருவரும் பார்த்துக்கொண்டதாகவும், இண்டர்காம் மூலம் உரையாடியதாகவும் கூறப்படுகிறது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த பகவந்த் மான், ``கடும் குற்றவாளிகளுக்கு கிடைக்கக்கூடிய வசதிகள்கூட அவருக்குக் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தமானது. அவர் என்ன தவறு செய்தார்... நாட்டின் மிகப்பெரிய தீவிரவாதிகளில் ஒருவரைப் பிடித்தது போல் நீங்கள் அவரை நடத்துகிறீர்கள். பிரதமர் மோடிக்கு என்னதான் வேண்டும்... வெளிப்படையான அரசியலை நடத்தி, பாஜக-வின் அரசியலுக்கு முடிவு கட்டிய கெஜ்ரிவால் இவ்வாறு நடத்தப்படுகிறார். ஆம் ஆத்மி ஒரு ஒழுக்கமான குழு என்பதால், நாங்கள் அனைவரும் ஒன்றாக கெஜ்ரிவாலுடன் உறுதியாக நிற்கிறோம். ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்போது, ஆம் ஆத்மி ஒரு பெரிய அரசியல் சக்தியாக உயரும்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.