சென்செக்ஸ் 347 புள்ளிகள் வீழ்ச்சி: 4 நாள் தொடர் ஏற்றத்துக்கு முடிவு

கடந்த நான்கு வர்த்தக தினங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை லாபப் பதிவால் புதன்கிழமை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 347 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 99 புள்ளிகளை இழந்தது.  உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை பலவீனமாகத் தொடங்கியது. பின்னர், வங்கி, எரிசக்தி, உலோகப் பங்குகளில் லாபப் பதிவு தொடர்ந்ததால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், மேற்கத்திய சந்தைகளில் தொடரும் மந்தநிலை மற்றும் சாத்தியமான வட்டி விகித உயர்வுகள் பற்றிய கவலைகள் உள்நாட்டுச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.  சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.13 ஆயிரம் கோடி குறைந்து ரூ.283.76 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) கடந்த திங்கள்கிழமை ரூ.2,085.62 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.  சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 129.16 புள்ளிகள் குறைந்து 62,839.97-இல் தொடங்கி அதிகபட்சமாக 62,876.77 வரை மேலே சென்றது. பின்னர், 62,401.02 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 346.89 புள்ளிகளை இழந்து 62,622.24-இல் முடிவடைந்தது.  19 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் 19 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 11 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,038 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,006 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 20 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 29 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.    

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.