640 கிராமில் பிறந்த குழந்தை: கண்காணிப்பில் 1 கிலோ எடை வரை வளர்த்து அரசு மருத்துவர்கள் சாதனை!

வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் வனிதா - மாரிமுத்து தம்பதி. நிறைமாத கர்ப்பிணியான வனிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். அவருக்குக் கடந்த மார்ச் 14ம் தேதி, 26 வாரங்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த நிலையில் 640 கிராம் எடை அளவில் பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது.

இதையடுத்து, மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணியின் அறிவுரையின்படி, எடை குறைவாக பிறந்த அக்குழந்தை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

மருத்துவக்குழு

குழந்தையின் எடை வளர்ச்சிநிலையை கண்காணிக்கத் தலைமை மருத்துவர் ஜவஹர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. அதன்படி, குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முருகேச லட்சுமணன், மருத்துவர்கள் சண்முகமூர்த்தி, பிரியங்கா ஆகியோர் தொடர்ந்து அக்குழந்தைக்கு சிகிச்சையளித்து வந்தனர். தேர்ச்சி நிலை அடைவதற்காக குழந்தைக்கு செயற்கை சுவாசமும், உயர் ரக மருந்துகளும் வழங்கப்பட்டு வந்தன. ’கங்காரு’ முறை அரவணைப்புடன், கண், காது, இருதயம் போன்ற உறுப்புகள் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டு உரிய சிகிச்சையளிக்கப்பட்டன. இதன் காரணமாக, குழந்தையின் உடல் எடை நன்கு தேறி 1 கிலோவாக வளர்ச்சியடைந்தது. இந்தநிலையில், வனிதா-மாரிமுத்து தம்பதியிடம் குழந்தையை மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி ஒப்படைத்தார்.

மேலும் குழந்தையின் வளர்ச்சிக்காக தொடர் சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.