ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி : நாடாளுமன்றம் 12வது நாளாக முடங்கியது: மக்களவை ஏப்ரல் 3 வரை ஒத்திவைப்பு!!

புதுடெல்லி: ராகுல் தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 12வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கியது முதலே தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முடங்கியுள்ளது. இந்த நிலையில், வழக்கம்போல் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்குக் கூடின. மக்களவையில் மூன்று மசோதாக்களையும், மாநிலங்களவையில் இரண்டு மசோதாக்களையும் அறிமுகப்படுத்தி அதன் மீது விவாதம் நடத்த அரசு தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது.எனினும், மக்களவை கூடியதும் ராகுல் காந்தி தகுதி நீக்கம்  மற்றும் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் விவகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவர்களுக்கு  ஈடுகொடுக்கும் விதமாக ராகுல் காந்தி பிரான்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டி குறிப்பிட்டு,  அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.  எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக மக்களவை ஏப்ரல் 3ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாநிலங்களவை கூடியதும் அங்கும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே ராகுல்காந்தி தகுதி நீக்கத்தைக்  கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து அமளியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.