`விஜயபாஸ்கர் குட்கா, குவாரி நிறுவனங்களிடம் ரூ.87.90 கோடி லஞ்சம் பெற்றிருக்கிறார்!-வருமான வரித்துறை

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை, உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய அனுமதித்ததாகவும், அதற்காக பெரும் தொகை லஞ்சமாக வாங்கியதாகவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், அப்போதைய காவல்துறை டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் பெயரும் அடிபட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி, தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பின்னர் உச்ச நீதிமன்றம் மூலம் சி.பி.ஐ வசம் சென்ற வழக்கில், குட்கா வியாபாரி மாதவ ராவ், கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

இதற்கிடையே, வருமான வரித்துறை சார்பில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியதில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, அவரது சொத்துகளில், புதுக்கோட்டையிலுள்ள நிலங்களையும், அவரின் வங்கிக் கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கியது.

இதை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

இதற்கு பதிலளிக்கும்விதமாக வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், "விஜயபாஸ்கருக்குச் சொந்தமான குவாரிகளில் அளவுக்கு அதிகமான கற்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் குறைவாகவே கணக்கு காட்டி வரி ஏய்ப்பு நடத்தியிருக்கிறார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் இவருக்கும் தொடர்பு இருக்கிறது. கூவத்தூரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்ட போது இவர் சுமார் ரூ.30 லட்சம் செலவு செய்திருக்கிறார். அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. குட்கா, குவாரி நிறுவனங்களிடமிருந்து மொத்தம் ரூ.87.90 கோடி லஞ்சமாகப் பெற்றிருக்கிறார்.

வருமான வரித்துறை

இதற்கான எல்லா ஆதாரங்களும் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வருமானம் தொடர்பாக அவர் எந்தக் கணக்கும் காட்டவில்லை. இதன் அடிப்படையிலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரின் சொத்துகள் முடக்கப்பட்டன. அவருக்கு முறையாக வரி செலுத்துவதற்கு பலமுறை வாய்ப்புக் கொடுத்தோம். ஆனாலும் அவர் அதற்கான வரிகளை அபராதத்துடன் செலுத்தவில்லை. 20 சதவிகித வரியை மட்டுமாவது செலுத்துவதற்கு அறிவுறுத்தினோம். அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்பதால் அவரின் சொத்துகளும், வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது" என விளக்கம் அளித்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.