`அவர் சந்தோஷப்படுவார்!’ - மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பம்

திருச்சி உறையூர் நவாப் தோட்டத்தைச் சேர்ந்த 60 வயது நபர், பக்கவாதம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த நவம்பர் 27-ம் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மூளைச் செயலிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவரது குடும்பத்தார் சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு வந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கல்லீரல்

திருச்சியில் முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். அதையடுத்து முதியவரின் உடல் உறுப்புகளை தானமளிப்பது குறித்து அவருடைய குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் பேசியிருக்கின்றனர். அதற்கு, ‘அவர் இறந்த பின்னாடியும் யாருக்காவது நாம உதவியாக இருக்கோம்னு தெரிஞ்சா நிச்சயமா சந்தோஷப்படுவார்’ என கலங்கியபடியே அவரது குடும்பத்தார் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த முதியவரின் சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. அதன்பிறகு தமிழக அரசின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணைய வழிகாட்டுதலில், உடலுறுப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களின் பட்டியல் அடிப்படையில், திருச்சி அரசு மருத்துவமனையில் ஓராண்டு காலமாக மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பாதிப்புகளால் அவதியுறும் 57 வயது நோயாளிக்கு ஒரு சிறுநீரகத்தை பொருத்தினர். அந்த வகையில் திருச்சி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக நடைபெற்ற 11-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும். தானமாகப் பெறப்பட்ட மற்றொரு சிறுநீரகம் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.

திருச்சி அரசு மருத்துவமனை

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 2018-ம் ஆண்டு முதல், மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, தேவைப்படுவோருக்கு பொருத்தும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி இதுவரை மூளைச்சாவு அடைந்த 9 பேரிடமிருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, 11 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.