பாண்டியனின் நிலத்தை மீட்டுத் தந்த பூமிநாதர் - இன்றும் நிலப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் அதிசயம்!

வற்றாத ஜீவ நதியான பொருநை நதியின் தென்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு மரகதாம்பிகை சமேத பூமிநாத சுவாமி திருக்கோயில். இது பல புராணச் சிறப்புகளையும் வரலாற்றுப் பெருமைகளையும் கொண்ட பிரசித்தமான கோயில்.

முன்னொரு காலத்தில் மிருகண்டு முனிவர் என்னும் சிவபக்தரும் அவரது மனைவி மருத்துவவதியும் பிள்ளை வரம் வேண்டி சிவபெருமானிடம் சரணாகதி அடைந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவபெருமான் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றை வரமளித்தார். அவர்கள் அக்குழந்தைக்கு மார்க்கண்டேயன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். மார்க்கண்டேயன் சிறுவயதில் இருந்து சிவ பக்தனாய் வளர்ந்து வந்தான்.

மரகதாம்பிகை சமேத பூமிநாத சுவாமி கோயில்

சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கிய மார்க்கண்டேயனுக்கு அவனது ஜாதகத்தின்படி 16 வயதில் மரணம் என ஜோதிடர்கள் உரைக்கின்றனர். இதனால் மார்க்கண்டேயனின் பெற்றோர் தங்கள் மகன் இறக்கப்போவதை எண்ணி மிகுந்த கவலை அடைந்தனர். இதனையறிந்த மார்க்கண்டேயனோ சிவபெருமானிடம் தன்னை முழுமையாக சரணடையச் செய்திருந்தான். எப்படியாயினும் அடியார்க்கு நல்லான் எனப் போற்றப்படும் ஈசன் தன்னை என்றும் காத்தருளுவார் என்று சிவபெருமானிடம் தன் முழு நம்பிக்கையை வைத்தான்.

மார்க்கண்டேயன்

ஜாதகத்தில் உரைத்தபடி மார்க்கண்டேயனுக்கு பதினாறு வயதும் பிறந்தது. அன்று அவன் கோயிலினுள் உள்ள சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தான். அவனது உயிரை எடுத்துச் செல்ல வந்த எமதூதர்கள் சிவ வழிபாட்டில் இருக்கும் அவனைக் கண்டு விலகி நின்றனர். இதனையறிந்த யமதர்மன், தானே மார்க்கண்டேயனின் உயிரை எடுக்கிறேன் என உரைத்து அவனை நெருங்கினான். இது கண்டு அஞ்சிய மார்க்கண்டேயன் தன்தருகிலிருந்த சிவலிங்கத்தை கட்டியணைத்துக் கொண்டான். யமதர்மன் எறிந்த பாசக்கயிறு மார்க்கண்டேயனுடனிருக்கும் சிவபெருமானையும் சேர்த்தே இழுத்தது.

இதனால் கடுங்கோபமடைந்த சிவபெருமான், அவ்விடத்தில் தோன்றி யமதர்மனை தன் காலால் எட்டி உதைத்தார். இதனால் மூர்ச்சையான யமன் சிறு கொடியாய் மாறி இந்த ஸ்தலத்தில் வந்து விழுந்தான் என்கிறது இக்கோயில் தலவரலாறு. இதனால், யமனின் வேலை பாதிக்கப்பட்டது; உயிர்கள் சாகாததால் அகிலத்தின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமாதேவி இந்த ஸ்தலத்தில் உள்ள சிவபெருமானை வழிபட்டு கோரிக்கையிட, சிவபெருமான் பூமாதேவிக்கு உதவிட யமனுக்கு உயிர் தந்து, இந்த அண்டத்தின் பாரத்தைக் குறைத்தார். இவ்வுலகத்தை காப்பாற்றியதால் இங்குள்ள ஈசன் பூமிநாதர் என்னும் நாமம் கொண்டு அழைக்கப்படுகிறார் என்கிறது தலவரலாறு.

மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்

அதேபோல் முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னன் அதிவீரவழுதி மாறன் என்பவனை வகுளத்தாமன் என்ற மன்னன் போரில் வீழ்த்தினான். தன் நாடு, செல்வம் என அனைத்தையும் இழந்த அதிவீரவழுதி தன் கால்போன போக்கில் நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது இங்கிருந்த பூமிநாதரிடம் சரண் அடைந்து கண்ணீர் மல்க தன் வருத்தத்தை கூறினான். அந்நேரத்தில் அசரீரியாக ஒலித்த சிவபெருமான், "மகனே நீ கலங்காதே! உன் எஞ்சிய சிறு படை கொண்டு மீண்டும் போரிடுவாயாக! என் அருளால் உனக்கு வெற்றியே கிட்டும்! பின்‌ இத்தலம் வந்து நீ எனக்கேற்ற திருப்பணிகள் செய்வாயாக!" என்று உரைத்தார். சிவனின் திருவாய் மொழி கேட்டு வாடியிருந்த மன்னனின் மனம் துணிச்சல் கொண்டது. ஈசனே துணை இருப்பதால் வீறுகொண்டு தனது சிறு படை கொண்டு மீண்டும் போரிட்டு வெற்றியும் பெற்றான். அதன்பின் மன்னன் இத்திருத்தலம் வந்து ஆகம முறைப்படி கோயில் எழுப்பி இறைவனை வழிபட்டு வந்தான். இப்படி அதிவீரவழுதியின் பூமியை மீட்டுத் தந்துதவியதாலும் இங்குள்ள ஈசன் பூமிநாதர் என்று பெயர் பெற்றார் என்றும் இங்குள்ளோர் கூறுகிறார்கள்.

"சென்ற வருடம் என் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறிதான் இங்கு வந்து பூமிநாதரை வழிபட்டு சிறப்பு பூஜைகள் செய்தோம். பூமிநாதர் அருளால் பல பிரச்னைகளில் சிக்கியிருந்த எங்கள்‌ நிலத்தை பத்திரமாக மீட்டேன். பூமிநாதர் என்றும் யாருக்கும் பூமியை வாங்கவும் மீட்கவும் உதவுவார், அதற்கு நானே சாட்சி" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் அங்கு வந்த பக்தர் ஒருவர்.

பூமிநாதர்
"பூமிநாதர் எங்க மண்ணுல இருக்கிறதாலதான் எங்க வீரவநல்லூர் என்னைக்கும் செழிச்சு கிடக்குது. மழை, வெள்ளமென எந்த ஒரு பாதிப்பு வந்தாலும் எங்க மண்ணுக்கு எந்த பாதிப்பும் நேராது" என்கின்றனர் வீரவநல்லூர் கிராம மக்கள். இப்படி மண்ணையும் மக்களையும் காக்கும் அந்த மகேசனை நாமும் ஒருமுறை சென்று தரிசித்து வரலாமே!

எப்படிச் செல்வது? இக்கோயிலில் வழிபாடு செய்வது எப்படி?

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது வீரவநல்லூர். ஊரின் நடுவே செழித்துக் கிடக்கும் வயல்வெளிகளுக்கு இடையே ஏகாந்தமாக வீற்றிருக்கிறார் ஸ்ரீபூமிநாதர்.

திருவாதிரை மற்றும் பிரதோஷ நாள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. வீடு கட்டத் தொடங்கும் முன் பூமிநாதரை வழிபட்டுத் தொடங்கினால் நல்ல முறையில் வீடு கட்டலாம் என்பது ஐதீகம். மேலும் நிலம், வீடு சம்பந்தமான பிரச்னைகள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட சீராகும் என்பது நம்பிக்கை.

- நா.கோமதி சங்கர், மாணவப் பத்திரிகையாளர்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.