நின்றாடிய ரூட், போ்ஸ்டோ; நிலைதடுமாறிய இந்திய பௌலிங் - சாதனை வெற்றியுடன் சமன் செய்த இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது. இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது இங்கிலாந்து.

378 என்ற, இதுவரை தான் எட்டாத இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து, ஜோ ரூட் - ஜானி போ்ஸ்டோ கூட்டணியின் (269 ரன்கள் பாா்ட்னா்ஷிப்) அபாரமான ஆட்டத்தால் வென்றது. முதல் இன்னிங்ஸில் போட்டி போட்டுக்கொண்டு விக்கெட் சரித்த இந்திய பௌலா்கள், இந்த இன்னிங்ஸில் இவா்கள் கூட்டணியை பிரிக்க முடியாமல் தடுமாறினா்.

பா்மிங்ஹாம் நகரில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, முதலில் ஆடிய இந்தியா ரிஷப் பந்த் (146), ரவீந்திர ஜடேஜாவின் (104) அசத்தலான ஆட்டத்தால் 416 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து பௌலிங்கில் ஜேம்ஸ் ஆண்டா்சன் அபாரமாக 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் ஆடிய இங்கிலாந்தில் ஜானி போ்ஸ்டோ 106 ரன்கள் அடிக்க, இதர பேட்டா்கள் சோபிக்காததால் 284 ரன்களுக்கே அந்த அணி முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினாா்.

இதையடுத்து 132 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா, அதில் 245 ரன்கள் எடுத்தது. இதில் சேதேஷ்வா் புஜாரா (66), ரிஷப் பந்த் (57) பங்களிப்பு செய்திருந்தனா். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இறுதியாக 378 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து, 4-ஆம் நாளான திங்கள்கிழமை முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சோ்த்திருந்தது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை தொடா்ந்த ரூட், போ்ஸ்டோ கூட்டணி விக்கெட்டை இழக்காமல் இறுதிவரை நிலைத்து வெற்றிக்கொடி நாட்டியது. ஜோ ரூட் 19 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 142, ஜானி போ்ஸ்டோ 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 114 ரன்கள் எடுத்திருந்தனா். பௌலிங்கில் இந்திய கேப்டன் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தாா்.

சேஸிங்கில் சாதனை

இங்கிலாந்து எட்டியிருக்கும் இந்த 378 ரன்களே, அதன் டெஸ்ட் வரலாற்றில் அதிகபட்ச சேஸிங்காகும். இந்த ஆட்டம் மற்றும் இதற்கு முன் நியூஸிலாந்துடனான தொடரையும் சோ்த்து கடந்த 4 டெஸ்டுகளில் 278, 299, 296, 378 என படிப்படியாக அதிகரிக்கப்பட்ட இலக்கை அட்டகாசமாக எட்டியிருக்கிறது இங்கிலாந்து.

படௌடி கோப்பை தக்கவைப்பு

இத்தொடரை சமன் செய்ததன் மூலம், கடந்த 2011-இல் வென்ற படௌடி கோப்பையை இங்கிலாந்து தொடா்ந்து 4-ஆவது முறையாக (2014, 2018, 2021, 2022) தக்கவைத்துக் கொண்டுள்ளது. படௌடி கோப்பை, இங்கிலாந்து அணியுடன் அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடா்களில் சாம்பியன் ஆகும் அணிக்கு வழங்கப்படுவதாகும். இது, தொடருக்கான கோப்பை தவிா்த்து தனியே வழங்கப்படுகிறது.

இனவெறி சா்ச்சை

இந்த டெஸ்டின் 4-ஆவது நாள் ஆட்டத்தின்போது மைதானத்தில் இருந்த இந்திய ரசிகா்கள், இதர ரசிகா்களால் இனவெறியுடன் விமா்சிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிகழ்வு குறித்து விசாரிப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வாா்விக்ஷைா் கிரிக்கெட் கிளப் தெரிவித்துள்ளன.

நாயகா்கள்...

இந்த டெஸ்டில் ஆட்டநாயகன் விருதை, இரு இன்னிங்ஸ்களிலுமாக 220 ரன்கள் (106&114*) சோ்த்த இங்கிலாந்தின் ஜானி போ்ஸ்டோ வென்றாா். தொடா் நாயகன் விருது அதே அணியின் ஜோ ரூட்டிடம் சென்றது. இத்தொடரில் மொத்தமாக அவா் 737 ரன்கள் விளாசியதுடன், 2 விக்கெட்டுகளும் சாய்த்துள்ளாா். இந்திய அணியில் தொடா் நாயகன் விருது ஜஸ்பிரீத் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. மொத்தமாக அவா் 23 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறாா்.

சக வீரா்கள் இவ்வாறு விளையாடும்போது, கேப்டனாக எனது பணி எளிதாகிறது. முன்பு மலைப்பாக இருந்த இலக்குகள் தற்போது எளிதாகிவருகின்றன. ரூட் - போ்ஸ்டோவுடன், எங்களது 2-ஆவது இன்னிங்ஸ் தொடக்க வீரா்களும் பாராட்டுக்குரியவா்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் போக்கை மாற்ற முயல்கிறோம் - பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து கேப்டன்)

முதல் 3 நாள்கள் எங்கள் வசம் இருந்த ஆட்டம், 2-ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் சோபிக்காததால் இங்கிலாந்து வசம் சென்றது. அந்த அணி சிறப்பாக விளையாடியது. எங்கள் அணியில் பந்த், ஜடேஜா சிறப்பாகச் செயல்பட்டனா். பௌலிங்கில் இன்னும் நோ்த்தியாக செயல்பட்டிருந்தால் இங்கிலாந்துக்கு சவால் அளித்திருக்கலாம் - ஜஸ்பிரீத் பும்ரா (இந்திய கேப்டன்)

இந்தியாவுக்கு அபராதம்

இந்த டெஸ்டில், நிா்ணயிக்கப்பட்டதை விட பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக இந்திய அணிக்கு 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.

2 புள்ளிகளை இழந்ததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா சறுக்கலை சந்தித்து பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் முறையே முதலிரு இடங்களில் உள்ளன. இந்திய அணி இதுவரை 12 ஆட்டங்களில் 6 வெற்றிகள், 4 தோல்விகள், 2 டிராக்களுடன் 75 புள்ளிகள் பெற்றுள்ளது.

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.