உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நெருக்கடியில் இந்திய அணி

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்த இந்தியா 4-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.

5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜோ ரூட், பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கினார்கள். 76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. ஜோ ரூட் 142, பேர்ஸ்டோ 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. 2007-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. ஆனால் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி 5-வது டெஸ்டை வெல்ல உதவினார்கள். 

5-வது டெஸ்டில் ஓவர்கள் வீச நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் இந்திய அணிக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3-வது முறையாக இந்திய அணி இந்தச் சூழலை எதிர்கொண்டுள்ளது. இங்கிலாந்து தொடரில் முதல் மற்றும் கடைசி டெஸ்டிலும் தென்னாப்பிரிக்கா தொடரில் ஒரு டெஸ்டிலும் என மூன்று முறை ஓவர்கள் வீச நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட காரணத்துக்காக 5 புள்ளிகளை இழந்துள்ளது இந்திய அணி. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்த இந்திய அணி 4-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது.

அபராதப் புள்ளிகளால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இழக்கவும் வாய்ப்புள்ளது. தற்போது 52.08% புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது இந்திய அணி. 52.38% புள்ளிகளுடன் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான். 

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு இன்னும் 6 டெஸ்டுகள் மீதமுள்ளன. வரும் டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்டுகளும் அதன்பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்டுகளும் உள்ளன. அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றால் 69.98% புள்ளிகளைக் கொண்டிருக்கும். இதன் அடிப்படையில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி

ஆஸ்திரேலியா - 77.78%
தென்னாப்பிரிக்கா - 71.43%
பாகிஸ்தான் - 52.38%
இந்தியா - 52.08%

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.