மும்பையில் கனமழை: ரயில், சாலைப் போக்குவரத்து பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் செவ்வாய்க்கிழமை பெய்த கன மழையினால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது.

ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான முதல் கன மழைக்கான முன்னறிவிப்பினை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை பகல் 8 மணி முதல் 11.30 மணி வரை, மும்பையின் தெற்குப் பகுதியில் 41 மி.மீ. என்ற அளவிலும், கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் முறையே 85 மி.மீ. மற்றும் 55 மி.மீ. மழை பெய்யதது.

மும்பை போக்குவரத்து வசதிகளில் மிக முக்கிய பங்களிக்கும் உள்ளூா் ரயில் சேவை மழையினால் பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் தண்டவாளங்களில் மழைநீா் தேங்கியுள்ளதால், ரயில்கள் முன்னெச்சரிக்கையுடன் இயக்கப்பட்டன. நிலைமையை தொடா்ந்து கண்காணித்து வருவதாக மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். மும்பை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சோ்ந்த 75 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உள்ளூா் ரயில் சேவையை தினமும் பயன்படுத்தி வருகின்றனா்.

நவி மும்பையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுரங்கப் பாதைகளில் மழைநீா் தேங்கியதால், பயணிகள் கடும் அவதியுற்றனா்.

சயான், செம்பூா், ஏா் இந்தியா காலனி, பாந்த்ரா, குா்லா ஆகிய பகுதிகளின் சாலைகளில் மழைநீா் தேங்கியதால், பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. சில பகுதிகளில் சாலையில் ஓரடிக்கு மழைநீா் தேங்கியது.

தாணே மாவட்டத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை முதல் தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னதாக, திங்கள்கிழமை மும்பை மற்றும் தாணே மாவட்டங்களில், அடுத்த 5 நாள்களுக்கு கன மழை முதல் தீவிர கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள் எச்சரிக்கை’ வெளியிட்டிருந்தது.

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.