அதிமுக: ``ஓபிஎஸ்-க்கு எந்தவித செல்வாக்கும் இல்லை! - உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு கூடுதல் மனு

அ.தி.மு.க-வின் செயல்பாட்டுக்கு ஓ.பி.எஸ் ஒத்துழைப்பு தரவில்லை என, உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பு தாக்கல்செய்த 378 பக்கங்கள் கொண்ட மனுவில், ``ஓ.பி.எஸ் தரப்பினருடைய நடவடிக்கைகள், அ.தி.மு.க-வின் அடிப்படை நோக்கத்துக்கு எதிராக இருக்கின்றன. அவர்களின் செயல்பாடுகள் எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு எதிராக இருக்கின்றன" எனக் கூறப்பட்டிருந்தது.

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், இ.பி.எஸ் தரப்பினர் தற்போது இது தொடர்பாக கூடுதல் மனு ஒன்றையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில், ``உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவற்கு ஓ.பி.எஸ் உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள் என அழைப்புவிடுத்தும்கூட அவர் கலந்துகொள்ளாமல் இருக்கிறார். இப்படியாக ஓ.பி.எஸ்-ன் அனைத்து செயல்பாடுகளும் கட்சியின் முக்கிய செயல்பாடுகளை முடக்கும் வகையில் இருக்கின்றன.

ஓ.பி.எஸ்

இருப்பினும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், கட்சியின் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக்கூடிய இடத்தில் இருந்த அவர், அதையும் சரிவரச் செய்யாமல் இருந்தார். இதனால் கட்சி செலவுகளுக்கான தொகையையும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்பதையும் தாண்டி, கட்சியின் பொருளாளராகக் கடமையைச் செய்யாமலிருப்பது கட்சியின் நலனைக் கெடுக்கும் முயற்சி. அது மட்டுமல்லாமல், இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் ஓ.பி.எஸ்-க்கு அ.தி.மு.க-வில் எந்தவித செல்வாக்கும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், இ.பி.எஸ் தரப்பு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.