Bhool Bhulaiyaa 2: தபு, கியாரா அத்வானி, கார்த்திக் ஆர்யன் - பயமுறுத்துகிறதா பாலிவுட் `சந்திரமுகி 2?

மஞ்சுலிகாவின் ஆவி உலாவும் பழங்கால அரண்மனையின் பூட்டிய அறையைத் திறப்பதால் வெளிவரும் ரகசியங்கள்தான் இந்த `Bhool Bhulaiyaa 2.

ஒரு பயணத்தில் அந்நியர்களாக அறிமுகமானாலும், ஒரு சில காட்சிகளிலேயே கார்த்திக் ஆர்யனுக்கும், கியாரா அத்வானிக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. ஒரு பொய்யை மறைப்பதற்காகவும், வீட்டில் நல்லது நடப்பதற்காகவும், பூட்டப்பட்ட புராதன அரண்மனை ஒன்றில் சென்று தங்குகிறது இந்த ஜோடி. அந்த அரண்மனையின் ஓர் அறையில்தான் மஞ்சுலிகாவின் ஆவியை (பாலிவுட் சந்திரமுகி) மந்திர தாந்திரிகங்களின் உதவியுடன் அடைத்து வைத்திருக்கின்றனர்.

சமய, சந்தர்ப்பங்களால் கியாராவின் குடும்பம் உட்பட, கிராமம் முழுவதற்கும் ரூ பாபா என்னும் சாமியாராகிறார் கார்த்திக் ஆர்யன். தன்னால் இறந்தவர்களுடன் பேச முடியும் என்றும் நம்ப வைக்கிறார். பின்னர் என்ன, ஒரு சுபயோக சுப தினத்தில், அதே சமய சந்தர்ப்பங்களால் கார்த்திக் ஆர்யன் மஞ்சுலிகாவின் அறையைத் திறந்துவிட, வெளிவரும் மஞ்சுலிகா, பல்வேறு ரகசியங்களையும் வெளிக்கொண்டு வருகிறாள். இறுதியில் கியாராவின் பெரிய குடும்பம், கார்த்திக் ஆர்யன் உதவியுடன் மஞ்சுலிகாவை சமாளித்ததா இல்லையா என்பதுதான் கதை.

Bhool Bhulaiyaa 2

தமிழ் சினிமாவில் எப்படி சந்திரமுகி ஒரு கிளாசிக் படமோ, அதேபோல்தான் பாலிவுட்டில் Bhool Bhulaiyaa. அக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் சூப்பர்ஹிட்டான படம். தற்போது இயக்குநர் அனீஸ் பாஸ்மீ, ஆகாஷ் கௌசிக்கின் கதையை Bhool Bhulaiyaa 2-வாக மாற்றியிருக்கிறார். டெம்ப்ளேட் அதேதான் என்றாலும், அரண்மனை, காஞ்சனா படங்களின் சீக்குவல்கள் போலவே இதையும் தனிப்படமாகத் தாராளமாகப் பார்க்கலாம்.

படத்தின் சீக்குவல் அறிவிக்கப்பட்டபோதே கார்த்திக் ஆர்யன், பழைய அக்ஷய் குமாரின் மேஜிக்கை மீட்டுருவாக்கம் செய்வாரா என்பதாகச் சந்தேகங்கள் எழுந்தன. அப்படியெல்லாம் சந்தேகப்பட்டதே தவறுதான் என்று என்னும் வகையில் ஒவ்வொரு காட்சியையும் தன் நடிப்பால் கட்டி ஆள்கிறார் கார்த்திக் ஆர்யன். பயத்தால் மிரளும் உடல்மொழி, காமெடி டைமிங், சமாளிப்புகள் சக்சஸாகும்போது வெளிப்படும் துள்ளல் என எல்லா எமோஷன்களிலும் பாஸாகிறார். பொய், பித்தலாட்டம் செய்யும் ஜோசியக்காரத் தம்பதிகளை அவர் டீல் செய்யும் காட்சி, பேய் உள்ளே புகுந்ததாகப் பெண்மை கலந்த நளினத்தில் நடனமாடுவது எனப் பல காட்சிகளில் ஒரு நடிகனாக மிளிர்கிறார்.

Bhool Bhulaiyaa 2, Bhool Bhulaiyaa 1 - கார்த்திக் ஆர்யன், அக்ஷய் குமார்
கார்த்திக் ஆர்யனை மிஞ்சுவது படத்திலிருக்கும் சீனியர் தபு மட்டுமே. முதல் பாகத்தில் வித்யா பாலன் அசத்தியிருந்தால் இதில் அஞ்சுலிகா, மஞ்சுலிகா என இரட்டை வேடங்களில் மிரட்டியிருக்கிறார் தபு. குடும்ப சீனியராக, பொறுப்பான மருமகளாக சாந்தமான முகம் அஞ்சுலிகா என்றால், பேயாக மிரட்டும் இன்னொரு டெரர் முகம் மஞ்சுலிகா. உண்மைகள் வெளிவந்த பின்னர் அவர் காட்டும் இன்னொரு முகம் தபு ஸ்பெஷல்!

நாயகி கியாரா அத்வானிக்கு நல்லவேளையாகக் கதையில் முக்கிய வேடம்தான். சிறப்பாகச் செய்திருக்கிறார். காமெடிக்கு என ராஜ்பால் யாதவ் (முதல் பாகத்திலும் வந்தவர்), சஞ்சய் மிஸ்ரா, அஸ்வினி கல்சேகர் உள்ளிட்டோர் கிச்சு கிச்சு மூட்டுகின்றனர். ராஜ்பால் யாதவ் தன் கெட்டப்புடன் வந்து நின்றாலே திரையரங்கம் குலுங்குகிறது.

`வெல்கம், `சிங் இஸ் கிங், `வெல்கம் பேக் எனப் பல காமெடி சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் அனீஸ் பாஸ்மீ காமெடி ஹாரர் ஜானரிலும் தன் முத்திரையைப் பதிக்கிறார். முதல் பாகத்தின் அழுத்தத்தை ஒதுக்கிவிட்டு, பெங்காலி பேய், அரண்மனை என்பதை மட்டும் வைத்துக்கொண்டு புதியதொரு பின் கதையையும், பிரச்னையையும் சொல்லியிருக்கிறார்.

முதல் பாகத்திலிருந்து தீம் மியூசிக்குடன் கூடிய அந்த டைட்டில் சாங் மற்றும் மேரே தோல்னா (ரா... ரா...) பாடல்களை இப்போதைய டிரெண்டுக்கு ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். மேரே தோல்னா பாடலுக்கு தபு, கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி என ஒவ்வொருவரும் தனித்தனியே அவரவர் வெர்ஷனில் நடனமாடி இருக்கிறார்கள். அதுவே ஒரு நாஸ்டால்ஜியா உணர்வைக் கொடுத்து 90ஸ் கிட்ஸை கட்டிப் போடுகிறது.

Bhool Bhulaiyaa 2

அதே சமயம், பார்த்தவுடன் காதல், குடும்ப விவகாரங்களுக்கு அந்நியரிடம் உதவி கேட்பது என முதல் 20 நிமிடங்கள் பார்த்துப் பழகி எக்ஸ்பையரியான பாலிவுட் ஸ்க்ரிப்ட். பெரிய அரண்மனை, அதனால் பெரிய குடும்பம், நிறையக் கதாபாத்திரங்கள் என எல்லாம் சரிதான். ஆனால், யாருக்கு யார் என்ன உறவுமுறை என்பது புரியவே இன்னுமொரு 20 நிமிடங்கள் தேவைப்படுகின்றன. காமெடி படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாதுதான் என்றாலும் ஒரு கிராமமே முட்டாளாக இருப்பது என்ன லாஜிக்கோ!

வழக்கமான ஹாரர் காமெடிகளில் இருப்பதுபோலவே இதிலும் காமெடி தூக்கல், ஹாரர் குறைவு. கிளாசிக் படத்தின் பேயைக் கொண்டு வருவது என்று முடிவான பிறகு ஹாரராக இன்னமுமே விளையாடியிருக்கலாமே! அதேபோல் VFX காட்சிகளுக்கும் கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட்டிருக்கலாம்.

முதல் பாகத்தை விடுத்து, தனிப்படமாகவும் இது நிற்கவேண்டும் என்பதற்காக, மஞ்சுலிகாவின் பெங்காலி பூர்வீகத்தை மட்டும் வைத்துக்கொண்டு, புதியதொரு பிளாஷ்பேக் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதில் வரும் அந்த ட்விஸ்ட், நமக்கு பிரியாமணி நடித்த `சாருலதா படத்தைதான் (தாய்லாந்து படமான `அலோன்தான் ஒரிஜினல்) நினைவூட்டுகிறது. புதிதாக யோசிக்கிறேன் என அதையே அப்படியே இங்கே இறக்கியிருக்கிறார்கள்.
Bhool Bhulaiyaa 2

ஆனால், மொத்தமாக 140 நிமிடங்கள் எங்கும் தேங்கி நிற்காமல் படம் என்டர்டெயின் செய்வது ஆறுதலான விஷயம். முதல் பாகத்தின் கொண்டாட்ட உணர்வு இதில் கொஞ்சம் மிஸ்ஸிங் என்றாலும் கார்த்திக் ஆர்யனின் காமெடி கலாட்டாக்கள் படத்தைக் காக்கின்றன. தபுவின் நடிப்பும் மிரட்டல் ரகம் என்பதால், பேய் போர்ஷன்களும் பாஸ் மார்க் பெறுகின்றன.

நாஸ்டால்ஜியா உணர்வுகளைக் கொண்டு வரும் நல்லதொரு ஃபேமிலி என்டர்டெயினர் இந்த `Bhool Bhulaiyaa 2.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.