வேலூர் அருகே மிக பிரபலமான பொய்கை மாட்டுச்சந்தையில் குவிந்த மாடுகள்: ரூ2 கோடிக்கு மேல் எகிறிய வர்த்தகம்

வேலூர்: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று அதிகளவில் மாடுகள் குவிந்ததால் வர்த்தகம் ரூ2 கோடிக்கு மேல் எகிறியதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பெரிய கால்நடை சந்தைகளில் ஒன்றாக கருதப்படும் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கூடுகிறது. ஜெர்சி வகை கலப்பினம் மற்றும் நாட்டு கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், ஆடு, கோழிகள் என அனைத்து கால்நடைகளும் இங்கு விவசாயிகள் மற்றும் கால்நடை வியாபாரிகளால் கொண்டு வரப்படுகின்றன. அதனுடன் கால்நடைகளுக்கான மணிகள், கயிறுகள், விவசாய கருவிகள், காய்கறிகள்கூட சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொய்கை மாட்டுச்சந்தைக்கு அனுமதியில்லாத நிலையில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சில மாதங்களாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் களைக்கட்டிய சந்தை பின்னர் தொடர் மழையின் காரணமாக சரிவை கண்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் பொய்கை மாட்டுச்சந்தை கூடியது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரம் முதல் 1,500 கறவை மாடுகள், உழவு மாடுகள் என விற்பனைக்காக வந்திருந்தன. கறவை மாடு ஒன்று ரூ50 ஆயிரம் முதல் ரூ60 ஆயிரம் வரை விற்பனையானது. ஜல்லிக்கட்டு காளைகள் ரூ1 லட்சம் முதல் விற்பனையாகின. இன்று நடந்த சந்தையில் ரூ2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்திருக்கலாம் என்று விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.